பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளவுக்குள் பூரண அமைதி நிலவுவதாகவும் அங்கு சகல கல்வி நடவடிக்கைகளும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் நிலமையை ஆராய்வதற்காக அரசாங்கத்தின் அமைச்சரவைக் குழுவொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு நிலமைகளை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஆகியோரும் நிலமைகளை ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதய நிலமைகளை தொடர்ந்தும் விவரித்த பிரதியமைச்சர் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலமைகள் சுமூக நிலையை அடைந்திருப்பதுடன், பூரண அமைதி ஏற்பட்டுள்ளது. சகல மாணவர்களும் எந்த வித கஷ்டங்களுமின்றி நடமாடக்கூடியதொரு நிலமையையும் காண முடிந்தது. அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் செனற்சபை அங்கத்தவர்கள்,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோர் மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் அவை பயனுள்ளதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடல்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீண்டும் சுமூக நிலமைக்கு கொண்டு வருவதற்கு அனைவர் மத்தியிலும் இணக்கப்பாடு ஏற்பட்டது. அத்துடன் சுமூக நிலை ஏற்படுத்துவதற்கு சகலரும் ஒத்துழைக்கப் போவதாகவும் விருப்பம் தெரிவித்தனர். இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் துரதிஷ்டமானவை என சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், மீண்டும் அம்மாதிரியான ஒரு நிலமை ஏற்படாமலிருக்க உறுதி பூணுவதாகவும் குறிப்பிட்டமை மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாகும்.

இதனை தெற்குக்கு கருத்து பரிமாறப்பட வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். சகல மாணவர்களினதும் எதிர்பார்ப்பாக இருப்பது மிகவிரைவில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதாகும். இங்கு இடம்பெற்ற சிறிய சம்பவங்கள் மிகவும் விகாரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அனைவராலும் உணரக் கூடியதுள்ளதாக இருந்தது. எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட துணைவேந்தர், விரிவுரையாளர்கள் ஏனைய அதிகாரிகள் ஆகியோர் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சகலவித நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி பீடங்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் உபவேந்தர் உறுதி மொழி வழங்கினார். அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளையும் பழைய நிலமைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார். ஏற்பட்ட அசம்பாவிதங்களுடன் தொடர்புடைய மாணவர்களுக்கான விசாரணைகள், வீடியோ சாட்சிகளை பரிசீலித்ததன் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

இங்கு தெற்கின் மாணவர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், சிங்கள தமிழ் முஸ்லிம் கல்விமான்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகவும், வர்த்தக நடவடிக்கைகள் முன்னரை போன்றே இடம்பெற்று வருவதாகவும், தெற்கைச் சேர்ந்த ஒரு சில மாணவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ள போதிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் வரவிருப்பதால் கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தவித தடைகளும் ஏற்பட போவதில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வருவற்காக சகல தரப்பினரதும் அர்ப்பணிப்புக்களை வரவேற்பதுடன் மீண்டும் இம் மாதிரியானதொரு துரதிஷ்ட நிலை ஏற்படாமலிருப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாகவும் பிரதியமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா கிளிநொச்சி பீடங்கள் நாளை முதல் திறக்கப்படவிருப்பதுடன், மருத்துவ மற்றும் ஆயுர்வேத பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் உபவேந்தர் இங்கு கருத்து தெரிவித்தார். அத்துடன் கலைப்பீடத்துக்கான பரீ்ட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஏற்கனவே குறிப்பிட்டது போல் நடாத்தப்படவிருப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.