தேசிய வானொலி பரந்தளவிலான ஊடகக் கல்வியில் தடம்பதிக்கிறது.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடகக் கல்வி நிலையம் கொத்மலை சமூக வானொலி வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. அமைச்சர் கயந்த கருணாதிலக்க நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்த சமூக வானொலி வலைப்பின்னலில் கொத்மலை சமூக வானொலி முதலாவதாகத் திகழ்கிறது. இந்த நிலையமானது வானொலி ஊடகம் தொடர்பான பரந்த அறிவை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளில் மகத்தான பணிகளை ஆற்றியிருக்கின்றது.
சமூக வானொலி என்ற எண்ணக் கருவிற்கு விரிவான அர்த்தத்தை வழங்கும் வகையில் சமூக வானொலியை ஊடகப் பயிற்சிக் கல்லூரியாக மாற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிறந்த ஊடகவியல் தொடர்பில் அரசாங்கத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது இதன் நோக்கமாகும். இந்த ஊடக கல்வி நிலையத்தின் மூலம் பயிற்சி பெறுபவர்கள் சமூக வானொலியின் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்கின்றார்.
ஊடக பயிற்சி கல்லூரியின் அங்குரார்ப்பண வைபவம் இன்று முற்பகல் பத்து மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் ஊடக பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோரும் கலந்து கொள்வார்கள். கண்டி பிரதேச பாடசாலை மட்ட ஊடகப் பிரிவுகளின் அங்கத்தவர்களும், பிரதேச ஊடகவியலாளர்களும் பங்கேற்பார்கள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட இணையத் தளமும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் இன்று மீள அங்குரார்ப்பணம் செய்யப்படும். இதன் முகவரி www.slbc.lk என்பதாகும்.