எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கான நிலத்துடன் கூடிய வீடு வெகுவிரைவில் நிர்மாணிக்கப்பட்டு அவரிடம் கையளிக்கப்படுமென பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த பின்னர் ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வயதில் மூத்தவர், அவரது வயதின் பொருட்டு அவரால் மாடிப்படிகளில் ஏறி வீட்டுக்கு செல்ல முடியாது. ஆகவே தான் வயதில் மூத்த ஒருவரின் நன்மை கருதி அவருக்கான நிலத்துடன் கூடிய வீட்டினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், இவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியில் இருப்பதால் இவருக்கான பாதுகாப்பு, போக்குவரத்து, போன்ற அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.