மத்திய வங்கிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று (29) பிற்பகல் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வங்கியின் பணிக்குழாமினரை சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து பணிக்குழாமினருடன் கலந்துரையாடுவதே ஜனாதிபதியின் இவ்விஜயத்திற்கான நோக்கமாகும். நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டங்களை வடிவமைப்பதில் பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட எல்லா தரப்பினருடையவும் சுதந்திரமான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே தமது எதிர்ப்பார்ப்பாகும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
பலமான பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் எல்லா தரப்பினருடையவும் பயனுறுதி வாய்ந்த பங்கேற்பு அரசாங்கத்திற்கு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மத்திய வங்கியின் பணிக்குழாம் அதிகாரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினருடனான இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால சவால்கள் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
பிரதமர் ரனில் விக்ரமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.