அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் உரிமைச்சட்டம் மீதான பொதுமக்களின் ஆர்வம் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவலறியும் உரிமைச் சட்டமானது உலகில் 7 ஆவது சிறந்த சட்டமாகும். தெற்காசியாவைப் பொறுத்த வரையில் இந்திய சட்டமூலம் முதலாவது இடத்திலும், இந்த சட்டமூலம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

இன்று(27) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கென அவர்களிடத்தில் கொண்டு செல்ல முன்னர், சட்டத்திலுள்ள அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் தேவைப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் தகவல்களை அறிவதற்கான விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்திய பல உலக நாடுகள் தமது இரண்டாவது ஆட்சிக் காலப் பகுதியிலேயே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன. எனினும் எமது புதிய அரசாங்கம் முதலாவது ஆட்சிக் காலத்தில், ஆட்சியமைத்து ஒன்றரை வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரே இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இத் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வரலாற்று ரீதியில் மிகவும் பயனுள்ளதும் நன்மையானதுமான சட்டமாக அமையவுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.