ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 ஆம் திகதி சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளாக"விநியோகச் சங்கிலியில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்" பேணப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் இலங்கையில் சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் இன்று(22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உலகளாவிய ரீதியில் சிறுவர் தொழிலைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணக்கரு, 2010 இல் நெதர்லாந்து, ஹேக் நகரில் நடந்த சிறுவர் தொழில் பற்றிய சர்வதேச மாநாட்டில் புதியதொரு திருப்பத்தினை பெற்றது. 2016 ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலின் மோசமான வடிவங்களை இல்லாதொழிக்க வேண்டுமென்று நாடுகள் தீர்மானித்தன. இலங்கையும் இதில் கைச்சாத்திட்டது. அத்துடன் சிறுவர் தொழிலை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கான முன்னோக்கு என்ற வரைபையும் உருவாக்கியது.
14 வயதுக்கு குறைந்த சிறுவரெவரும் இவ்வாறான சங்கிலித் தொடரில் வேலைக்கமர்த்தப்படுதல் கூடாது. 14 - 18 வயதுக்கிடைப்பட்ட இளையோர் இவ்வாறான சங்கிலித் தொடரில் காணப்படும் அபாயகரமான தொழில்களில் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பு, நடத்தை, என்பவற்றை பாதிக்கும் வகையில் தொழிலில் அமர்த்தப்படக் கூடாது.
இவ்வகையில் பல்வேறு நிறுவனங்களினால் சிறுவர் தொழிலை நாட்டிலிருந்து அகற்றும் நோக்குடன் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2013 ஆம் ஆண்டில் இரத்தினபுரி மாவட்டம் சிறுவர் தொழிலற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கேகாலை, அம்பாறை, கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கிறது.