2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை இருந்த இடத்தினை விட 18 இடங்களால் முன்னேறி 97 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன் மூலம் இலங்கை உள்ளக மற்றும் வெளியக சமாதானத்தினை பேணுவதில் ஒரு நாடு என்ற வகையில் தனது பலத்தினை நிரூபித்துள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம், 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம் வெளியிடுகின்றது. அவ்வகையில் சமாதானத்திற்கான தரம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடும் அளவிடப்படுகின்றன.
இவற்றுள் இலங்கை நாடு இவ்வாண்டில் 2.133 என்ற சராசரிப் புள்ளியினைப் பெற்று 97 ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது. கடந்த வருடம் 162 நாடுகள் பங்குபற்றிய இவ் அளவீட்டில் இலங்கை 114 ஆவது இடத்தை பெற்றிருந்ததுடன் அதற்கு முன்னர் 104 ஆவது இடத்தை பெற்றிருந்தது. அதனடிப்படையில் இவ்வாண்டு இலங்கை 18 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.
இவ் அளவீட்டின் மூலம் பங்குபற்றிய அனைத்து நாடுகளுக்கும் மத்தியில் இரண்டாவது அபிவிருத்தி முன்னேற்றத்தினை கொண்டுள்ள நாடாக இலங்கையை சுட்டிக் காட்டியுள்ளனர். இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக சமாதான சுட்டியில் இம்முறையும் சிரியாவுக்கு இறுதியிடமே கிடைத்துள்ளது. தெற்காசிய நாடுகளில் பூட்டானுக்கு 13 ஆவது இடமும் நேபாளத்திற்கு 78 ஆவது இடமும் பங்களாதேஷுக்கு 83 ஆவது இடமும் இந்தியாவுக்கு 141 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 153 ஆவது இடமும் கிடைத்துள்ளன. சுட்டியில் ஆப்கானிஸ்தான் 160 ஆவது இடத்தில் உள்ளது.
நிலையான அரசியலில் ஏற்பட்ட முன்னேற்றம், வன்முறை ஆர்ப்பாட்டங்கள், உள் முரண்பாடுகள், கால சாத்தியக்கூறுகள், அனைத்து உள்நாட்டு நிலைமையில் விரிவாக்கம் பங்களிப்பு ஆகியவனவும் இதில் பாரிய பங்களிப்பினை செய்துள்ளன. மற்றும் தற்போதய இலங்கை நாட்டின் நிலையானது மற்றைய சில நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது உள்ளக முரண்பாடுகள் மற்றும் கொலை, மக்களின் உயிரிழப்பு வீதங்களை குறைவாக காட்டி நிற்கும் ஒரு நாடாக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.