கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா என்பவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இதன்படி இன்று (08) முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதோடு, இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

29 ஆளுநர்கள் மற்றும் 06 ஜனாதிபதிகள் தமது கடமைப் பணிகளுக்காகவும் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தி வந்த கோட்டை ஜனாதிபதி மாளிகை முதன் முறையாக மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை சுற்றி உள்ள வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தவில்லை என்பதோடு, அதனை அரச விருந்தினர்களை வரவேற்பது உட்பட விசேட சந்தர்ப்பங்களுக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஒரு புதிய அரசியல் பயணத்தில் புதியதோர் பாரம்பரியத்தை ஆரம்பித்து வைத்து இதுவரையில் பொதுமக்கள் பிரவேசிக்க முடியாது மூடப்பட்டிருந்த அரச மாளிகையை பொதுமக்களுக்காக திறந்துவிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். 

0773086366 என்ற தொலைபேசி இலக்கத்தில் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் விமர்சன சத்துரங்கவை தொடர்பு கொண்டு இதனை பார்வையிடுவதற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையின் வரலாறு காலணித்துவ காலம் வரையில் நீண்டதாகும். இன்று அரச மாளிகை அமைந்துள்ள இடம் போர்த்துக்கேயர் ஆட்சியின் போது ஒரு தேவாலயமாக காணப்பட்டது. 

1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு கோட்டையில் உயரமான நிலப் பகுதியில் பிரான்சிஸ் தேவாலயத்தை அமைத்தனர். அவர்கள் தேவாலயத்திற்கு அருகில் பிரான்சிஸ் சேமக்காலையை நிர்மாணித்ததுடன் அப்போது காலம்சென்ற போர்த்துக்கேய தலைவர்களின் பூத உடல்களையும் அங்கேயே அடக்கம் செய்தனர். இந்த இடத்தில் ஒல்லாந்த கட்டிடக் கலைக்கு ஏற்ப ஒரு இரண்டு மாடி மாளிகை அப்போது இலங்கையில் இருந்த ஒல்லாந்த ஆளுனரான ஏங்கல் பேக்கினால் நிர்மாணிக்கப்பட்டது. 

காலத்திற்கு காலம் இந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டு அம்மாளிகை அரச மாளிகையாக பின்னர் கட்டியெழுப்பப்பட்டது. 1782 ஆம் ஆண்டு பிரித்தானிய படையினர் கொழும்பு கோட்டையை தாக்கி ஒல்லாந்தர்களை வீழ்த்திய போதும் ஏங்கல் பேக் இவ் இல்லத்திலிருந்து வெளியேறவில்லை. பிரித்தானிய ஆளுநரான பெற்றிக் நோத் அவர்களின் கீழ் அரச வருமான அதிகாரியாக சேவை செய்த ஜோஜ் மெல்வின் லெஸ்லி என்பவரிடமிருந்து அரச கணக்காய்வு அறிக்கையின்படி 10,000 பவுன்கள் குறைவுற்றிருந்தமையினால் அவரது மனைவியான ஏங்கல் பெக்கின் பேரப்பிள்ளை தமது கணவரை காப்பாற்றும் நோக்குடன் இந்த இல்லத்தை அரசாங்கத்திற்கு கையளிக்க தீர்மானித்தார். 

8700 பவுன்கள் இதற்கு உத்தேச விலையாக தீர்மானிக்கப்பட்ட போதும் எஞ்சிய பவுன் தொகையை குறைத்து பிரித்தானிய அரசாங்கம் இதனை உடமையாக்கிக் கொள்ள விரும்பியதன் காரணமாக 1804 ஜனவரி மாதம் 17ஆம் திகதி இவ் இல்லம் அரச உடமையாக்கப்பட்டது.