சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்துடன் இணைந்ததாக நடாத்தப்படும் புகைத்தலுக்கு எதிரான கொடி விற்பனை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கொடி அணிவிக்கும் நிகழ்வு இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

”சிகரட் புகையிலிருந்து விடுபட்ட அனைவருக்கும் வாழ்வதற்கு உகந்த ஒரு சூழல்” எனும் தொனிப் பொருளின் கீழ் 20வது தடவையாக இடம்பெறும் இந்நிகழ்ச்சித்திட்டம் மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 26ஆம் திகதி வரை நாடு பூராக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

1996ஆம் ஆண்டு முதல் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தோடு இணைந்ததாக புகைத்தலுக்கு எதிரான கொடி விற்பனை நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் சிந்தனைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் ”போதையில் இருந்து விடுபட்ட நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன, வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.