சிறுநீரக நோயாளிகளுக்கான நீர் சுத்திகரிப்பு கருத்திட்டங்கள் மற்றும் முழு நாட்டையும் இணைக்கும் வகையிலான மின் பரிமாற்ற வழிகளை தாபித்தல் என்பவற்றுக்காக இலங்கைக்கு 38 பில்லியன் அபிவிருத்திக் கடன் உதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
ஜப்பான் இசெஷிமாவில் நடைபெற்ற ஜீ 7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து 2016 மே 28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் மேன்மைதங்கிய சிங்சோ அபே அவர்களுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையே ஜப்பான் நகோயாவில் ஒரு இரு இருதரப்பு உச்சி மாநாட்டு சந்திப்பு இடம்பெற்றது இதன் போதே ஜப்பான் இந்த உதவிகளை வழங்க முன்வந்தது.
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஆசியாவின் குரலை உயர்த்தி மேற்கு நாடுகளுக்கு ஆசியக் கண்ணோட்டத்தை விபரித்தமைக்காக ஜப்பான் பிரதமர் அபே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஊடக அறிக்கை
ஜப்பான் – இலங்கை உச்சிமாநாடு சந்திப்பு
ஜப்பான் இசெஷிமாவில் நடைபெற்ற ஜீ 7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து 2016 மே 28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் மேன்மைதங்கிய சிங்சோ அபே அவர்களுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையே ஜப்பான் நகோயாவில் ஒரு இரு இருதரப்பு உச்சி மாநாட்டு சந்திப்பு இடம்பெற்றது.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய அமைவிடம் குறித்தும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் பிராந்திய தொடர்பை பலப்படுத்துவது முழு பிராந்தியத்தினதும் சுபீட்சத்திற்கான முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஜப்பானுக்கும் -இலங்கைக்குமிடையிலான விரிவான பங்குடைமையை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டுறவையும் தரமான உட்கட்டமைப்புக்கான பங்குடமைக்கான கூட்டுறவைப் பலப்படுத்தவும் இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
பொருளாதார கூட்டுறவு
இலங்கையின் சமூக பொருளாதார அபிவருத்தியை மேலும் மேம்படுத்தும்வகையில் வடமத்திய மாகாணத்தில் நீர்வழங்கள் வசதிகளுக்காகவும் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மின்பரிமாற்ற வழிகளை நிர்மாணிப்பதற்கும் சுமார் 38 பில்லியன் யென்களை அபிவிருத்தி உதவிக் கடனாக வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் அபே விருப்பம் தெரிவித்தார். பரிமாற்ற வழிகளை நிர்மாணிக்கும் கருத்திட்டமானது கிழக்கு மாகாணத்தில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொழும்பு நகரத்திற்கு பரிமாற்றுவதற்கு உதவும்.
இலங்கையில் தேசிய அபிவித்தி முயற்சிகளில் பெரும் பொருளாதாரம், பொதுநிதி முகாமைத்துவம் மற்றும் தனியார்த்துறையை முன்னேற்றுதல் என்பவற்றில் கொள்கை மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கு உதவும் அபிவிருத்திக் கொள்கைக் கடன் வழங்குவது தொடர்பில் சாதகமாக கருத்திற்கொள்ள முடியும் என்ற தமது எண்ணத்தையும் பிரதமர் அபே வெளிப்படுத்தினார்.
பிராந்தியத்தின் துரித வளர்ச்சி மற்றும் அதிகரித்துவரும் கேள்வியைக் கவனத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தில் ஒரு பிரதான கேந்திர நாடாக இலங்கையில் துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தினை இருதலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பில் ஜப்பான் வழங்கியுள்ள உதவிகளை ஜனாதிபதி சிறிசேன பாராட்டினார்.
அரச மற்றும் தனியார்த்துறை கூட்டுறவின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திக்கான தனது கூட்டுறவை ஜப்பான் தொடர்ந்தும் வழங்கும் எனவும் பிரதமர் அபே தெரிவித்தார். கொழும்பு வடக்கு துறைமுகம், அதனைச்சுற்றியுள்ள பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆய்வுகளைச் செய்வதற்கு ஆய்வுப் பணியாளர்களை அனுப்பும் எண்ணத்தையும் பிரதமர் அபே வெளிப்படுத்தினார்.
கண்டி நகரத்தை அதன் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்து பண்டைய நகரத்தின் நகர அபிவிருத்தித் தேவைகளுக்கேற்ப ஒரு மூலத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை வழங்கும் ஜப்பானின் தீர்மானத்தையும் பிரதமர் அபே முன்வைத்தார். அதற்காக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்பிவைக்கும் எண்ணத்தையும் அவர் மேலும் வெளிப்படுத்தினார். ஜப்பானின் உதவிகளுக்கு ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.
ஜப்பானின் டிஜிடல் தொலைக்காட்சி முறைமையைப் (DTTB) பின்பற்றும் இலங்கையின் தீர்மானத்தை இருதலைவர்களும் வரவேற்றதுடன் இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதறகு வசதியளிக்கும் ஒரு இருதரப்பு இணைக்குழுவை அமைத்தல் மற்றும் இக்குழுவின் முதலாவது கூட்டத்தை யூன் மாதத்தில் நடாத்துதல் உள்ளிட்ட இந்த ஜப்பானிய முறைமையின் (DTTB) சுமுகமான பரிமாற்றத்தை உறுதிசெய்வதற்கான இருதரப்பு பணிகளின் முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். இம்முறைமையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பாராளுமன்ற சீர்திருத்தங்கள் வெகுசன ஊடக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
கடல்மார்க்க கூட்டுறவு
இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கொள்கைசார்ந்த உரையாடலின் முதற்கட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையையும் கடந்த 2016 ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற கடல்மார்க்கப் பாதுகாப்பு, கடல்சார் பிரச்சினைகள் குறித்த இலங்கை ஜப்பான் உரையாடலையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இரண்டு நாடுகளுக்கிடையிலான கடல் மார்க்க கூட்டுறவைப் பலப்படுத்தும்வகையில் இரண்டு கண்காணிப்பு கப்பல்களை வழங்குவது உட்பட கடல்மார்க்க இயல்திறன் மேம்பாட்டுக்கான (சுமார் 1.8 பில்லியன் யென் பெறுமதியான) கருத்திட்டத்தின் உறுதியான முன்னேற்றத்தின் அவசியத்தையும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
03 தேசிய நல்லிணக்கமும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதும்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய நல்லிணக்க செயன்முறையின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டதுடன், 2016 மே 18 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் (சுமார் 1.7 பில்லியன் யென் பெறுமதியான) ஆய்வு மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதியை அமைப்பதற்கான கருத்திட்டம் தொடர்பிலான குறிப்புகளைப் பரிமாரிக் கொண்டமையையும் வரவேற்றனர். திரு.மொட்டூ நகுஷி அவர்களின் பங்களிப்பு உட்பட தேசிய நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான தொடர்ந்தும் உதவும் என்றும் பிரதமர் அபே தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி கடல் மார்க்கப் பாதுகாப்பு தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற துறைகளில் உறுதியான கூட்டுறவை மேம்படுத்துவும் இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் ஒரு விரிவான பங்குடைமை தொடர்பில் இணைந்த பிரகடனத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும்வகையில் ஒரு இணைக்குழுவை அமைக்கவும் இரு தலைவர்களும் தீர்மானித்தனர்.