G-7 அமைப்பின் 42 ஆவது உச்சிமாநாடு இன்று(26) ஜப்பான் நாட்டின் சிசாகி நகரத்தில் ஆரம்பமாகிறது.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இவ் உச்சி மாநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான சிறந்த வழியைக்காட்டும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகளின் அடிப்படைப் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இம்முறை நடைபெறுகிறது.

சம்பிரதாயபூர்வமான G7 நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக பூகோள பொருளாதாரம் வெளிநாட்டுக்கொள்கை, தேசிய பாதுகாப்பு, பூகோள சுகாதாரம், பெண்களை வலுவூட்டுதல் ஆகிய விடயங்களுக்கு இம்மாநாட்டின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த G-7 அமைப்பில் அங்கத்துவ நாடுகளாக இருக்கின்றன. 1975 ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் எண்ணெய் தொடர்பிலான நெருக்கடி நிலையை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக இந்த அமைப்புத் தொடங்கப்பட்டது. உலகம் தற்பொழுது பல பயங்கரவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளால் பல நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் காண்கின்றது. இந்த நிலையில், இவ்வாறான பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த உச்சிமாநாடு நடந்து வருகிறது.

இந்த வருட மாநாட்டுக்கு முன்னோடியாக ஏப்ரலில் அமைச்சர்கள் மட்ட மாநாடு நடத்தப்பட்டது. அதில் சிரியா மற்றும் உக்ரேனில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட மரணங்கள், அகதிகள் பிரச்சினை குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்தனர். இந்த மாநாட்டின் முடிவில் கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் மேற்படி நாடுகளில் காணப்படும் அரசியல் நிலைவரத்தை எடுத்துரைப்பதிலும், அங்கத்துவ நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அவ்வகையில் இன்று ஆரம்பமாகின்ற இவ் G-7 அமைப்பின் 42 ஆவது உச்சிமாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு G7 மாநாட்டின் தற்போதைய தலைவரான ஜப்பான் பிரதமர் சிங்சோ அபே அவர்களின் விசேட அழைப்பு விடுக்கப்பட்டது. அவ் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜப்பானுக்கான விஜயத்தினை நேற்று(25) மேற்கொண்டிருந்நதார். G7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை நாட்டின் அரச தலைவர் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

G7 உறுப்பு நாடு அல்லது ஒரு நாட்டுக்கு அவர்களது தலைவர்கள் மாநாட்டின் அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான பெறுமதியான ஓரு சந்தர்ப்பம் என்பதுடன், அதன் உச்ச பயனைப் பெற்று பலம்மிக்க ஏழு அரச தலைவர்களின் முன்னிலையில் எமது நாட்டின் பிரதிமையை எடுத்துச் செல்லவும் இந்நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான உச்ச பயனைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜனாதிபதிக்கு இந்த விஜயம் பயனுள்ளதாக அமையும் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.