லேக் ஹவுஸ், ரூபவாஹினி, டயலொக் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோரின் உபயோகத்துக்காக 50 நீர் இறைக்கும் இயந்திரங்களை நேற்று(23) கையளித்தன.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் மேற்படி நிறுவனங்களின் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேற்படி இயந்திரங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கையளித்தார். இவ்வைபவத்தில், அமைச்சர்களுடன் மேற்படி நிறுவனங்களின் தலைவர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பொது முகாமையாளர் அபே அமரதாச மற்றும் சட்டப் பணிப்பாளர் சிறிமோகன் டயஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளையும் கிணறுகளையும் சுத்தம் செய்யும் நோக்கில் மேற்படி நான்கு நிறுவனங்களும் தகவல் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள அனர்த்த நிதியத்தின் மூலம் இந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அனர்த்த நிதியத்தின் மூலம் 35 மில்லியன் ரூபாவைத் திரட்ட முடிந்துள்ளது. அதனை 100 மில்லியனாக்குவதே எமது எதிர்பார்ப்பு. டயலொக் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து குறுஞ்செய்தி (எஸ். எம். எஸ்.) மூலம் திரட்டிய தொகையினை மும்மடங்காக்கி இந்த நிதியத்துக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார். அனர்த்தங்களினால் சுயதொழிலை இழந்துள்ள 3000 பேருக்கு நிவாரணங்களை வழங்கவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இந்த நன்கொடையுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேற்படிநீர் இறைக்கும் இயந்திரங்களை அனர்த்த முகாமைத்துவ நிலைய தலைவருக்குக் கையளித்தார்.