எனது அன்புக்குரிய மக்களின் முன்னால் இவ் அறிக்கையினை முன் வைப்பதற்கான காரணம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டிருக்கின்ற துன்பகரமான நிலைமையும் அதையிட்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் அறியத் தருவதற்காகவே ஆகும்.

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமல் போனவர்கள், சொத்துக்களின் இழப்பு பற்றியும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் ஆழ்ந்த மனவருத்தத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்தோடு தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததில், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான நிவாரணப் பணிகளை ஏற்கனவே கடற்படை, தரைப்படை, வான்படை ஆகிய முப்படைகளும் பொலிஸ் பிரிவும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் தமது உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

இந்நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் முப்படைகள், பொலிஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கத்தின் கௌரவமிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் விதத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளையும் நாளை ஏற்படக்கூடிய நிலைமைகளைப்பற்றியும் எமக்கு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மூன்று வழிகளில் செயற்படுவதற்கு எண்ணியுள்ளோம்.

முதலாவதாக தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நிலைமைக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்காக எம்மால் இயன்ற ஆக உச்சக்கட்ட நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல். இரண்டாவதாக இந்த சீரற்ற காலநிலையுடன் மென்மேலும் மழை அதிகரிக்குமாக இருப்பின் அதற்கு முகங்கொடுக்க தயாராகுதல். மூன்றாவதாக இந்த சீரற்ற காலநிலை அகன்று இயல்பு நிலை ஏற்பட்டதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு அரசின் முன்னுரிமையை வழங்கி செயற்படுதல்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அரசு மிகுந்த பொறுப்புடன் தமது கடமைகளை புரிந்து வருவதாக கூற வேண்டும். அத்துடன் நான் இன்னொரு விடயத்தையும் இங்கு கூற வேண்டும். இந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவு, சுகாதார வசதிகள், தற்காலிக தங்குமிட வசதிகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை

எடுத்திருப்பதுடன் நமது நாட்டின் பொதுமக்கள் வர்த்தகத் துறையின் கொடையாளர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய அனைவரிடமும் மிகுந்த கௌரவத்துடனும் பணிவுடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அரசு என்ற வகையில் இந்நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக எம்மாலான அனைத்து செயற்பாடுகளையும் குறைவின்றி முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். ஆயினும் அநேகமாக இவ்வாறான பிரச்சினைகளின்போது எழுகின்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்வது இயலாத காரியமாகும். இருந்தபோதிலும் அக்குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் இயன்றளவு குறைத்துக் கொள்வதற்காக அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, நான் ஏற்கனவே கூறியதைபோன்று இந்நாட்டின் கொடையாளிகளிடமும் பொதுமக்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற மிக உச்சக்கட்ட உதவிகளை செய்து ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறான நன்கொடைகள், உதவிகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்கும்போது உரிய செயற்பாட்டின் தேவை இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டுவதற்காக மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் விசேட பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளோம் அதன்மூலம் முறையான திட்டங்களை வகுத்து ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் ஏற்படாதவகையில் கிடைக்கின்ற நன்கொடைகளை நேரடியாகவே பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை ஏற்படுத்தியுள்ளோம்.

அதேபோன்று அவ்வாறான நன்கொடைகளை தத்தமது விருப்பத்திற்கமைய நேரடியாக அந்தந்த பிரதேசங்களில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியும். அதேபோன்று மாவட்ட செயலகங்களினூடாகவும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பற்றியும் அப்பாதிப்புகளுக்கு இதுவரை பரிகாரம் கிடைக்காமல் இருப்பின் அதைப்பற்றியும் ஜனாதிபதி செயலகத்தில் ஸ்தாபித்திருக்கும் விசேட பிரிவின் 1919 தொலைபேசி இலக்கத்தினூடாக எமக்கு அறிவிக்க முடியும். அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இருந்து குறிப்பிட்ட சில பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பிரதேச அரசியல்வாதிகளின் செயற்பாடுகளில் குறைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இக்குற்றச்சாட்டானது அனைவர்மீதும் சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டல்ல, ஏராளமான பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இப்பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். ஆயினும் சில பிரதேசங்களின் செயற்பாடுகள் தொடர்பில் இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. ஆகையால் மிகுந்த கௌரவத்துடன் அரசியல் கட்சி பேதங்களின்றி அனைவரும் தத்தமது பிரதேசங்களில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்புகளை வழங்குவதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஏற்கனவே எமது வெளிநாட்டு அமைச்சின் ஊடாக நாம் எமது நட்பு நாடுகளிடமும் உயர் ஸ்தானிகர்களிடமும் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் குறிப்பாக வீட்டு வசதி, சுகாதார வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு எமது நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

அதற்கமைய ஏற்கனவே பல நாடுகள் எமக்கு உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவ்வனைத்து நாடுகளுக்கும் எனது கௌரவம் மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு இந்த மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் அனைத்து துறைகளையும் சார்ந்த அனைவருக்கும் நான் இவ்வேளையில் மீண்டும் நமது மக்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான உங்களது பணிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

அத்தோடு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காகவும் அரசு என்ற வகையில் எம்மாலான அனைத்தையும் மிகுந்த பொறுப்புடன் எந்தவிதமான குறையுமின்றி நிறைவேற்றுவோம் என்பதையும் என் அன்புக்குரிய மக்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.