மானிட சமூகத்தின் இருப்புக்கும் ஒரு சிறந்த மக்கள் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குமான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள், குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்காக உண்மையை முடியுமான அளவு மக்களிடம் கொண்டு சென்று மக்களுக்கு சரியான தகவல்களைப் பெற்றுக்கொடுப்பது ஊடக நிறுவனங்களினதும், ஊடகங்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் ஒரு சிறந்த ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்காக பல்கலைக்கழக வெகுஜன தொடர்பாடல்துறை விரிவுரையாளர்கள் சங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு 03 பிற்பகல் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெகுஜன தொடர்பாடல்துறை விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவினால் இந்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் சுதந்திர ஊடகக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும், ஊடக சுதந்திரத்தை மதிக்கும் ஒரு அரசாங்கம் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் நீண்டகால குரலாக இருந்துவரும் தகவல் அறியும் சட்டத்தை பாராளுமன்றத்தில் மிக அண்மையில் நிறைவேற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரச சார்பற்ற சில ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களது அரசியல் மற்றும் கலாசார எண்ணங்களுக்கேற்ப மட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டினுள் உறுதி செய்யப்பட்டிருக்கும் ஊடகச் சுதந்திரத்தை எவ்வளவு தூரம் ஊடக ஒழுக்கங்க்களைப் பேணி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணயன்படுத்துகிறோம் என்பது தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷனி குணதிலக்க, களணி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் சம்பத் அமரதுங்க, ஸ்ரீபாலி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரஞ்சன் ஹெட்டியாரச்சி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட பீடாதிபதி பேராசிரியர் வன்னிகமகே சந்திரதாச, பத்திரிகைப் பேரவையின் தலைவர் சட்டத்தரணி கொக்கல பந்துல வெல்லால ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.