ஊடகங்கள் தொடர்பில் புதிய கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
இங்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஊடகங்கள் தொடர்பில் தற்போது இருந்து வரும் கட்டமைப்புக்கள், செயற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதை விடுத்து புதியதொரு கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவது சிறப்பானதாகும். அவ்வகையில் தற்போதய அரசு ஊடகங்களின் கட்டமைப்புக்கான மாற்றங்கள், ஊடக சுதந்திரம் தொடர்பில் கவனமெடுத்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகைப் பேரவையின் மாதாந்த விரிவுரை நிகழ்வொன்று நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்தத அவர், ஊடகங்களுக்கான கொள்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது அவற்றுக்கான கொள்கைகள் மிகவும் வினைத்திறனுள்ள முறையில் அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலுடன் செயற்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் சுதந்திரமானதொரு ஒழுங்குமுறை அமைப்பினை பேணுவதன் மூலம் அது ஊடகங்களுக்கும் தகவல் அறியும் சட்டமூலத்துக்கும் பெரும் ஆதரவாக அமையும் எனத் தெரிவித்தார்.

நடைபெற்ற நிகழ்வில் முக்கிய குறிப்புரையானது பேராசிரியர் ரோகண லக்ஸ்மன் பிரியதாஸ அவர்களினால் நடத்தப்பட்டது. மேலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் பொபகே, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் கலாநிதி தர்ஷணி குணதிலக்க, இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவர் கொக்கல வெலால பந்துல, மற்றும் பல ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.