உலகளாவிய ரீதியில் ஊடகங்களிற்கான சுதந்திர தினம் (World Press Freedom Day) இன்று(03) அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனையொட்டி சர்வதேச ரீதியில் ஊடகவியலாளர்களையும் ஊடகத்துறையையும் கௌரவிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 19 ஆவது திருத்தத்தில் உள்ள பேச்சுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும் அவற்றை சர்வதேச நாடுகளுக்கு நினைவூட்டும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஊடக சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு நினைவூட்டும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனொஸ்கோவினால் ஊடக சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினம் தகவல்களை சுதந்திரமாக வெ ளிப்படுத்துவதால் நிலையான அபிவிருத்தியினை அடையலாம் என்ற தொனிப் பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 03 ஆம் திகதி உலக ஊடக சுதந்திரத்திற்கான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆபிரிக்கப் ஊடகவியலாளர்களால் கூட்டாக ஊடக சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இது உலக ஊடக சுதந்திரத்திற்கான தினம் பிரகடனப்படுத்தப்பட பிரதான காரணமாய் அமைந்தது.