நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ (Mónica Pinto) மற்றும் சித்திரவதைகள் மற்றும் கொடூர நடவடிக்கைகள், பொருத்தமில்லா தண்டனை விதித்தல் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஜூவான் மென்டோஸ் ( Juan E. Méndez) ஆகியோரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கை தொடர்பிலான விவாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவர்களது விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இவர்களது விஜயம் நாளை (29) முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள் தொடர்பிலான பிரதிநிதியொருவர் இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போதிலும் நீதவான்கள் தொடர்பிலான பிரதிநிதியொருவர் இதுவே முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது விஜயத்தின் போது அமைச்சர்கள், சட்டமா அதிபர், அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு அங்கத்தவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுடைய குடும்பங்கள் உள்ளிட்ட பலரையும் சந்திக்க உள்ளனர்.
வடக்கு, வடமத்திய, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்ய உள்ளனர். விஜயத்தின் நிறைவில் மே மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் இவர்கள் நடத்துவார்கள் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.