கடந்த வருடத்தில் இப்பட்டியலில் 165 ஆவது இடத்தினை வகித்த எமது நாடு இவ்வாண்டில் 24 இடங்கள் முன்னோக்கி நகர்ந்து 141 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளமை விசேட அம்சமாகும். மேலும் கடந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி முறைமையானது இம்முன்னேற்றத்திற்கு பாரிய அளவில் வித்திட்டது என்றால் மிகையாகாது. இவ் நல்லாட்சியின் கீழ் நல்லாட்சி அரசினால் ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, அதிக பத்திரிக்கை சுதந்திரமிக்க நாடாக, தொடர்ந்து 6 ஆவது முறையாகவும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே 2,3 மற்றும் 4 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. 180 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆகக்குறைந்த பத்திரிக்கை சுதந்திரமுள்ள நாடாக, கடைசி இடத்தைப் பிடித்துள்ளது எரித்ரியா (Eritrea). நியூசிலாந்து 5 ஆம் இடத்தினைப் பிடித்துள்ளது. 11 ஆவது இடத்தில் ஒஸ்ரியாவும் 119 ஆவது இடத்தினை ஐக்கிய அரபு இராச்சியமும் பிடித்துள்ளன.

எமது அண்டை நாடான இந்தியா 133 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 147 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 120 ஆவது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா 44 ஆவது இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, ரஷ்யா 148 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தந்த நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், ஊடக ஒடுக்குமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.