பாராளுமன்ற அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகரும், வழிநடத்தல் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் செயற்படவுள்ளனர்.
சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு உபதலைவர்கள் தெரிவாகியுள்ளதோடு, அடுத்த அரசியலமைப்பு சபையின் அமர்வில் தலா 11 பேரைக் கொண்ட உபகுழுக்களும் நியமிக்கப்படவுள்ளன. வழிநடத்தல் குழுவில் ஏழு சிறுபான்மையினரும், உபதலைவர்களில் இரு சிறுபான்மையினரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கான பிரேரணை அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்று(05) அரசியலமைப்புசபை கூடியது.
நேற்றுப் பிற்பகல் 01 மணிக்கு பாராளுமன்றம் வளமைபோன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் மற்றும் தினப்பணிகளைத் தொடர்ந்து பிற்பகல் 1.25 மணிக்கு பாராளுமன்றம் நாளைவரை (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றம் பெறுவது குறித்து விளக்கமளித்த சபாநாயகர், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் அமர்ந்திருந்து இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியிருந்ததோடு அது தொடர்பான சர்ச்சையின் முடிவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. படைக்கல சேவிதர் செங்கோலை சபையிலிருந்து எடுத்துச் சென்றார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்றனர்.
செங்கோல் எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமை ஆசனத்திலிருந்து கீழே இறங்கிவந்து, பாராளுமன்ற செயலாளர் நாயகம் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆசனங்களில் அமர்ந்தனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய
இதன் பின்னர் விசேட உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை வரலாற்றில் இது மிக முக்கியமான நாளாகும். நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் அபிப்பிராயமாக இருக்கிறது. இதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கவும், தேர்தல் முறையை மாற்றவும் சந்தர்ப்பம் எழுந்துள்ளது. எமக்குப் பொருத்தமான தேர்தல் முறை எது என்பதை மக்கள் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறிவதற்காக பிரதமர் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்தக் குழு மதத் தலைவர்கள், கல்விமான்கள், துறைசார்வல்லுனர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுள்ளது. அதன் அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கு முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாறுகிறது. இதில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கத்தவர்களாக இருப்பார்கள். இங்கு பேசப்படும் சகல உரைகளும் பதிவுசெய்யப்படவிருப்பதுடன், சகல ஆவணங்களும் கோப்பிடப்படும். இந்த அமர்வுகள் ஊடகங்களுக்கு திறந்துவிடப்படவிருப்பதுடன், மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேரடியாகப் பார்க்கவும் வசதி செய்துகொடுக்கப்படும்.
சகல கட்சிப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மக்கள் கருத்தறியும் குழுவொன்று மக்களின் கருத்துக்களைப் பெறவிருக்கிறது. எனது தலைமையின் கீழ் அரசியலமைப்பு சபை கூடவிருப்பதோடு எனது ஒத்துழைப்புக்காக ஏழு உபதலைவர்களும் செயற்படுவார்கள். 21 பேரைக் கொண்ட வழிநடத்தல் குழுவையும் பொருத்தமான தலைவர்களையும் தெரிவுசெய்ய வேண்டும். இது தவிர தலா 11 பேரைக் கொண்ட உபகுழுக்களும் நியமிக்கப்பட வேண்டும். உபகுழுக்களின் தலைவர்கள் வழிநடத்தல் குழுவினால் தெரிவு செய்யப்படுவார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து சபைமுதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அரசியலமைப்பு சபையின் உபதலைவர்கள் ஏழு பேரின் பெயர்களை சபையில் முன்மொழிந்தார். இதில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் கபீர் காசிம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான திலக் மாரப்பன, மஹிந்தயாப்பா அபேவர்த்தன, டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் அடங்குகின்றனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழிமொழிந்தார். இந்தத் தெரிவுகளுக்கு எவரும் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் இவர்கள் ஏழு பேரும் உபதலைவர்களாக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
அடுத்து, வழிநடத்தல் குழுவுக்கான 21 உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது. இதற்கான உறுப்பினர்களின் பெயர்களை ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக முன்மொழிந்தார். இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, நிமல் சிறிபால.டி.சில்வா, ரவூப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமயஜந்த், ரிஷாட் பதியுதீன், பாட்டளி சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, ஜயம்பதி விக்ரமரட்ன, எம்.ஏ.சுமந்திரன், துஷிதா விஜயமான்ன, பிமல் ரத்நாயக்க, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அடங்குகின்றனர். இந்த யோசனையை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே வழிமொழிந்தார். வழிநடத்தல் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவும் அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்தது.
அரசியலமைப்பு சபைக்கான உபகுழுக்கள் பிறிதொரு தினத்தில் தெரிவுசெய்யப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல அறிவித்தார். மக்கள் கருத்தறியும் குழு தனது அறிக்கையை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிப்பதாக அறிவித்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர், இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எத்தனை உபகுழுக்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்றார்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு சபைக்கான வழிநடத்தல் குழு, குழு அறை மூன்றில் கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். பத்துநிமிடங்களே கூடிய அரசியலமைப்பு சபையின் முதலாவது கூட்டம் பிற்பகல் 1.35 மணியளவில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து குழு அறை மூன்றில் வழிநடத்தல் குழுவின் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.
முதல்முறையாகக் கூடிய பாராளுமன்ற அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு சார்பில் குறைந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டிருந்தனர். ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சபையில் பிரசன்னமாகியிருக்காததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாற்று எதிரணியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
ஆளும் தரப்பிலும் ஐ.ம.சு.மு பாராளுமன்றக் குழுத் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா அடங்கலான சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அநேகரை சபையில் காணமுடியாதிருந்தது.. ஐ.தே.க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் எம்பிக்களும் குறைந்தளவினரே இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.
அரசியலமைப்பு சபை மே மாதம் முதல் தொடர்ச்சியாக கூடவுள்ளது.