இணையப் பாவனையின் மூலம் உலகம் சுருங்கியுள்ள போதிலும் இளைஞர்கள் தொழிநுட்பத்திற்கு அடிமைப்பட்டுப் போவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று முந்தினம் (02) சீகிரிய விமானப்படை முகாமில் நடைபெற்ற ‘யொவுன் புரய 2016’ நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றலையும் அறிவையும் விருத்தி செய்யும் நோக்குடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சித் திட்டத்தில் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 5000 இளைஞர், யுவதிகள் பங்குபற்றியதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் என்ற விடயத்தை உண்மையாகவே நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலத்தை மிகவும் சிறந்ததாக ஆக்க முடியும் என்றும் அதற்காக முன்னணியில் இருக்க வேண்டியது எமது நாட்டின் இளைஞர் தலைமுறையின் ஒரு மிகப்பெரும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் எல்லா பிள்ளைகளுக்கும் சமமான உரிமைகளும் சலுகைகளும் அனுபவிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வகையில் பிரதமரின் எண்ணக்கருவில் உருவான ‘யொவுன் புரய’ நிகழ்ச்சித்திட்டம் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இளைஞர்களது அறிவு தேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய உலகை வெற்றி கொள்வதற்கு இளைஞர்களுக்குத் தேவையான வளங்களையும் சூழலையும் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அங்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்பட்டிருந்த இளைஞர் முகாம்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார். 28 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் இந்த ‘யொவுன் புரய’ நிகழ்ச்சித்திட்டத்தை முன்னிட்டு ஒரு விசேட முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, அதனை தபால்சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கான கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகள் தொடர்பான கண்காட்சிக் கூடங்கள், தொழிற் சந்தைகள் ஆகியவும் இங்கு அமைக்கப்பட்டிருந்ததோடு, இளைஞர், யுவதிகளின் கலை மற்றும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த யொவுன் புரய நிகழ்ச்சித்திட்டம் இந்த நாட்டின் அதிகளவு இளைஞர்கள் பங்குபற்றிய இளைஞர் முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க. அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், சஜித் பிரேமதாச. ரிசாத் பதியுத்தீன், சாகல ரத்நாயக்க, சரத் பொன்சேக்கா, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா, பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் தளபதிகள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி எரங்க வெளியங்ககே மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.