பயங்கரவாதத்தினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்த நாடு என்ற ரீதியில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த துன்பகரமான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசும் மக்களும், பெல்ஜியம் அரசினதும் மக்களினதும் துன்பத்தில் பங்குகொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள முழுமையான செய்தியில்....

பிரசெல்ஸ் விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் பலியான மற்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் தொடர்பான செய்தியினைக் கேள்வியுற்று ஆழ்ந்த கவலையடைகின்றேன். இந்த பயங்கரவாதச் செயலானது முழு உலகத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

இச்சம்பவமானது எல்லா வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான எம்முடைய ஒன்றிணைந்த செயற்பாட்டின் தேவையினை நினைவுபடுத்தி நிற்கின்றது. மூன்று தசாப்தங்களாக கொடூரமான பயங்கரவாத செயற்பாடுகளால் பாதிக்கபட்ட ஒரு தேசமாக, பயங்கரவாதத்தினை உலகிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளும் எல்லாவகையான நடவடிக்கைகளுக்கும் இலங்கையானது எப்போதுமே முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.

என்னுடைய தனிப்பட்ட ஆழ்ந்த அனுதாபங்களை தொிவித்துக் கொள்ளும் இச்சந்தர்ப்பத்தில், இக்கொடூரமான தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தொிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.