கசகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெறவுள்ள "வேர்ல்ட் எக்ஸ்போ" 2017 கண்காட்சியில் நமது நாடும் பங்குபற்றி சிறந்த வௌிக்காட்டல்களை வழங்கவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை உப பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் நேற்று (17) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவ்வகையில் 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை நாடத்தப்படவுள்ள வேர்ல்ட் எக்ஸ்போ அஸ்தானா 2017 கண்காட்சியில் நமது நாட்டின் பங்களிப்பினை வழங்குமாறு கஜகஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

"வேர்ல்ட் எக்ஸ்போ" கண்காட்சியானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பல உலக நாடுகளின் பங்குபற்றுதலுடன் பலவகையான தொனிப்பொருள்களின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது. அவ்வகையில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியானது "நகரின் எதிர்கால சக்தி" என்ற தொனிப் பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகிறது.

எனவே குறித்த பங்குபற்றலை உறுதி செய்து கொள்வதற்காக வேண்டி பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமித்து கொள்வதற்கும் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்களை தயார்படுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.