கடந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 சதவீதத்தினால் வளர்ச்சியினை ஈட்டியுள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே.சதரசிங்க தெரிவித்தார்.

நேற்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இலங்கையின் தேசிய கணக்குகள் மதிப்பீடுகளுக்கான காலாண்டு மற்றும் வருடாந்த மதிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தௌிவுபடுத்தும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 8,622,825 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறுமதி 8,228,986 மில்லியனைப் பதிவு செய்ததன் மூலம் கடந்த ஆண்டில்  4.8 சதவீத நேர்வளர்ச்சியை எட்டியுள்ளது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொகைமதிப்பு மற்றும் புள்ளிவபரத் திணைக்களத்தினால் பல நிலைகளில் மதிப்பிடப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளாக விவசாயம் கைத்தொழில் சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் நிலையான விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமது பங்களிப்பினை முறையே 7.9 சதவீதம், 26.2 சதவீதம், 56.6 சதவீதம், மற்றும் 9.3 சதவீதமாக பதிவு செய்துள்ளது. 

கடந்த ஆண்டின் முழுக் காலப்பகுதியில் பொருளாதாரத்தின் மூன்று பிரதான நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு வளர்ச்சி வீத விரிவாக்கத்தினைக் காட்டுகின்றது. அதாவது விவசாயம் 5.5 சதவீத்தினையும், கைத்தொழில் 3.0 சதவீதத்தினையும், சேவைகள் 5.3 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. 

விவசாயத்துறையின் உப பிரிவுகளுக்கிடையில் நெல்வளர்ச்சி, மரக்கறி வளர்ச்சி என்பன மிக உயர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளது. அவ்வகையில் நெல் வளர்ச்சி 23.3 சதவீதமாகவும் மரக்கறி வளர்ச்சி 24.9 சதவீதமாகவும் பதியப்பட்டுள்ளது. அத்துடன் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டுக் காலப்பகுதியில் கால்நடை உற்பத்தி மற்றும் எண்ணெய் சார்ந்த பழங்களின் வளர்ச்சி தேங்காய் உள்ளடங்கலாக முறையே 8.0, 5.1 சதவீத வளர்ச்சி வீதங்களைப் பதிவு செய்துள்ளது. 

இவ்வேளையில் தேயிலை வளர்ச்சியும், கடல் மீன்பிடியும் மிகச் சிறிய வீழ்ச்சி வீதத்தினை எதிர்கொள்வதுடன் இவ்விரண்டு பொருளாதார நடவடிக்கைகளும் முறையே -2.6, -1.5 சதவீத வளர்ச்சி வீதத்தினை காட்டுகிறது. 

கைத்தொழில் துறைகளுக்கிடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர் பங்குடன் ஒப்பிடும் போது உப பிரிவுகளான உணவு குடிபானங்கள், மற்றும் புகையிலை உற்பத்தி, இறப்பர் உற்பத்தி, தளபாட உற்பத்தி, மற்றும் மின்வலு, வாயு, நீராவி, மற்றும் குளிரூட்டல் வழங்கல் என்பன முறையே 5.6, 4.7, 6.7 மற்றும் 7.8 சதவீத வளர்ச்சி வீதங்களை காட்டுகின்றன. 

அத்துடன் கடந்த ஆண்டுக் காலப்பகுதியில் சேவைத் துறையின் செயற்பாடு விசேடமாக தகவல் தொழில்நுடப திட்ட செயலாக்க ஆலோசனை, மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள், நிதிச் சேவை நடவடிக்கைகள், மற்றும் மெய் ஆதன நடவடிக்கைகள், என்பன குறிப்பிடத்தக்க உயர் வளர்ச்சி வீதங்களை முறையே 21.1, 15.8, மற்றும் 9.6 சதவீதங்களை பதிவு செய்துள்ளது. 

அத்துடன் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டின் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலைகளில் 2,387,136 மில்லியனாக மதிப்பிடப்பட்டதுடன், 2014 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2.5 சதவீத வளர்ச்சி வீதத்தினையும் பதிவு செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்.