உலகளாவிய ரீதியில் இன்று(08) மார்ச் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

சமூகத்தில் பெண்ணானவள் பல வகையான பொறுப்புக்களை தன்னகத்தே கொண்டு பல வகையான பணிகளை ஆற்றி வருகின்றாள். அவ்வாறான ​பெண்களுக்கு அவர்களுக்குரிய கௌரவம், பாதுகாப்பு, மதிப்பீடு மற்றும் அன்பை வழங்கி, அவளை முன்னேற்றகரமான சமூகப் பயணத்தின் பங்காளியாக சேர்த்துக் கொள்வது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். 

சர்வதேச மகளிர் தினத்தை நினைவு கூறும் வகையில், மகளிர் விவகார அமைச்சினால் "பலம் மிக்கதோர் பெண் - நிலையான எதிர்காலம்" என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மகளிர் தினத்தின் வரலாறு குறித்து நோக்குமிடத்து, 1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றினை சற்று பின்னோக்கி பார்க்குமிடத்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். 

இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது. 1910 ஆம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8 ஆம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம்‌ திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அவற்றினையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மகளிர் தினம் தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.