சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிரைச் சங்கங்களின் செயலாளர் நாயகம் திரு. எல்ஹாஜ் அஸ்ஸி அவர்கள் இன்று (03) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் நல்லிணக்கத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் சர்வதேச முகவர் நிறுவனங்களும் சமூகங்களும் மக்களிடம் நல்லிணக்கத்தைத் தேடி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முன்னாள் மோதல் பிரதேசங்களுக்கு விரைகின்றனர் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லிணக்கம் மக்களிடமிருந்து வரவேண்டுமேயல்லாமல் வெளித்தூண்டுதல்களின் காரணமாகவல்ல என்றும் தெரிவித்தார்.
கடந்த சுதந்திரதின நிகழ்வின்போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாட அனுமதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு குறிப்பிடத்தக்க ஒருதொகை மக்கள் பிரிவினர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவேதான் தெற்கிலுள்ள மக்களின் மனோநிலையை மாற்றுவது அவசியமாகும். தெற்கிலுள்ள மக்களின் மனங்களில், குறிப்பாக வளர்ந்தவர்களிடமே நல்லிணக்கம் விதைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இளம் தலைமுறையிடம் நிலைமை இதற்கு சாதகமானதாகவேயுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த திரு. எல்ஹாஜ், தான் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்குவாழும் மக்களின் வாழ்க்கை முறையில் சிறப்பான பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்தார். அங்குவாழும் மக்களின் வாழ்க்கை முறையிலும் மானோநிலையிலும் தற்போது ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நெஞ்சிலுவைச் சங்கப் பேரவை இப்பிரதேசத்தில் பல வீடுகளை நிர்மாணிப்பதற்குக் காரணமாக இருந்ததாகவும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து வீடு, வாழ்வாதார உதவி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார பராமரிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற உதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் மோதல் பிரதேசங்களுக்கு விஜயம் செய்தபோது தான் பெற்றுக்கொண்ட நல்ல அனுபவங்கள் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐ நா அலுவலகத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் திரு. எல்ஹாஜ் மேலும் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக இலங்கையில் வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும் குறிப்பாக கடந்த சுனாமி பேரனர்த்தத்தின்போதும் வடக்கு மற்றும் கிழக்கில் மோதலினால் பாதிக்கப்படடவர்களுக்கு உதவுவதிலும் இடம்பெயர்ந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேரவை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுவரும் மனிதாபிமானப் பணிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.