வடபகுதிக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளும் இக்குழுவினர் யுத்தத்தால் உயிரிழந்த மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துவைக்கவுள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் தமது தொழிலை முன்னெடுப்பதில் வடபகுதி ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கும், அவர்களின் நலன்புரிகள் குறித்து அறிந்துகொள்வதற்கும் இந்தப் பயணம் வழிவகுக்கும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். தென்பகுதி ஊடகவியலாளர்கள் வடக்கிற்குச் சென்று அங்குள்ள ஊடகவியலாளர்களுடன் நட்புடன் பழகுவதற்கான சந்தர்ப்பம் இதனூடாக கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்திருந்த 'டிஜிட்டல் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தின் செயற்பாடு' எனும் தலைப்பிலான செயலமர்வில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்:

எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் தென்பகுதி ஊடகவியலாளர்களுடன் வடக்கு நோக்கிப் புறப்படவுள்ளோம். இடைவெளியில் குருநாகல், அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிராந்திய ஊடகவியலாளர்களையும் அழைத்துச் செல்லவுள்ளோம்.

26,27,28ஆம் திகதிகளில் இடம்பெறும் இந்த வடக்கு விஜயத்தின் போது வடபகுதி ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். அங்குள்ள ஊடகவியலாளர்களின் நலன்புரிகள் தொடர்பில் கேட்டறியவிருப்பதுடன், உயிரிழந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களின் உறவினர்களையும் சந்திக்கவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு வீட்டை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனமும், ஒரு வீட்டை சுயாதீன தொலைக்காட்சியும் மற்றைய வீட்டை லேக்‌ஹவுஸ் நிறுவனமும் அமைத்துக் கொடுப்பதற்கு இணங்கியுள்ளன.

இந்த வீடுகளை அமைக்கும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இவற்றுக்கும் அப்பால் கலாசாரங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக தியகம பகுதியில் காணிகளை அளவிடும் பணிகள் இவ்வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஊடகத்துறை அமைச்சர், அடுத்த கட்டமாக பிராந்திய ஊடகவியலாளர்களுக்கென சகல மாவட்டங்களிலும் ஊடகவியலாளர் வீட்டுத்திட்டமொன்று அமைத்துக்கொடுக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி லோச்சந்தக்க ரணதுங்க, 'டிஜிட்டல் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தின் செயற்பாடு' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியிருந்தார்.