நேற்று (24) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தான் பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக 2013 இல் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் தற்போதைய விஜயத்தின் போது நாட்டில் மிகப்பெறும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை தான் தனிப்பட்ட முறையில் அவதானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய காலப் பகுதியில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பாராட்டிய நியூசிலாந்து பிரதமர், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்ள வாழ்த்தியதோடு, அத்தகைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையின் தலைமைத்துவத்திற்கு முடியுமென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அவர் விசேடமாக குறிப்பிட்டார். விவசாய நாடுகளான நியூசிலாந்தும் இலங்கையும் அத்துறையில் கூட்டுறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் கீ தெரிவித்தார்.

இலங்கையில் பாற்பண்ணைத்துறைக்கு உதவ தனது அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இலங்கையில் பாற்பண்ணை உற்பத்தி நிறுவனம் ஒன்றை அமைத்து அதன்மூலம் இலங்கை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்க முடியுமென்றும் தெரிவித்தார். இலங்கை விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு நாங்கள் உதவ விரும்புகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். நியூசிலாந்துக்கு மற்றுமொரு யாணைக்குட்டியை அன்பளிப்புச் செய்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் கீ, இலங்கையினால் முதலாவது அன்பளிப்பு செய்யப்பட்ட யானைக் குட்டி தற்போது 700 கிலோ நிறையை உடையதாக இருப்பதாகவும் மிருகவியல் பூங்காவிற்கு வருகை தரும் பிள்ளைகளை அது பெரிதும் கவர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து பிரதமர் கீ அவர்களின் பிரதிநிதிகள் குழுவில் பல முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஒரு வர்த்தக தூதுக்குழுவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.