இலங்கை சாரணர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9 ஆவது தேசிய சாரணர் ஜம்பொறியானது உள்நாட்டு வெளிநாட்டு சாரணர்கள் 10,000 பேரின் பங்குபற்றலுடன் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.

இந்த ஜம்பொறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நேற்று(22) மாலை யாழ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாட்டின் முதல் சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஜம்பொறியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை சாரணர் சங்க தலைவர் ரணில்சிறி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வடமாகாணத்தில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இந்த சாரணர் நிகழ்வை நடாத்துவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் 48 வருடங்களுக்கு முன்னர் சாரணராக இருந்தேன். செயற்பட்டேன். உலகத்தில் நல்லவர்களை உருவாக்ககூடிய ஒரு இயக்கமாகத்தான் இந்த சாரணிய இயக்கம் காணப்படுகிறது. நான் அன்று சாரணராக இருந்த காரணத்தால் தான் என்னவோ இன்று ஜனாதிபதியாக இருக்கிறேன். எனவே இந்த பிள்ளைகள் மத்தியிலே எதிர்கால ஜனாதிபதியும் இருக்கலாம்.

இந்த சர்வதேச இயக்கத்திலே தான் அனைவரும் ஒன்றாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. சாரணர் இயக்கத்தில் மனிதாபிமானம் உட்பட பல நல்ல குணங்கள் இருக்கின்றன. இதில் கோபம், வைராக்கியம், பொறாமை ஒன்றும் இல்லை. எனவே இன்று எமது நாட்டில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வழிகளில் சாரணர் இயக்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

எமது நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சாரணர் இயக்கத்துக்கு எந்தவித இன மத வேறுபாடுகளும் இல்லை அதனால் தான் உலகில் 42 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சாரணர் இயக்கத்தில் உள்ளார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை தான் இந்த இயக்கம் போதிக்கின்றது. மற்றவர்களுடைய கஸ்டத்தை பற்றி சிந்தியுங்கள் உதவி செய்ய முன்வாருங்கள் என்பதை சொல்லுகிறது.

அந்த போதனைகள் தான் அனைத்து மதங்களிலும் போதிக்கப்படுகிறது. எனவே இந்த இயக்கத்தின் பெறுமதி அன்று போல் என்றும் குறையப்போவதில்லை. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மாணவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளார்கள். நாம் பேசுகின்ற தேசிய நல்லிணக்க சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த சாரணியம் பாரிய சக்தியாக அமையும் என நம்புகிறேன். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டை முன்னேற்றுவதற்கு அந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்.

நாட்டை ஒன்றுபடுத்துவது என்பது நாட்டு மக்கள் ஒன்றுபடுத்துவது தான். மக்கள் ஒன்று படுத்துவது என்பது முதன் முதலில் நாட்டில் உள்ள பிள்ளைகள ஒன்று படுத்த வேண்டும் பிள்ளைகளால் எமக்கு எந்த பிரச்சனைகளும் முரண்பாடுகளும் இல்லை அனைத்து பிள்ளைகளின் உள்ளத்திலும் மனிதாபிமானம் தான் உள்ளது. கோபம், பொறாமை குரோதம் இல்லை. எனவே இந்த சாரணர் இயக்கத்தை கட்டிடியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குவோம்.

அதை பலப்படுத்துவதற்காக அரசிடம் விடுக்கும் எந்த வேண்டுகோளுக்கும் இணங்கி செயற்படுவோம். எனவே சாரணர் இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் நல்ல எதிர்காலம் இருக்கின்றது. அந்த எதிர்காலத்துக்கு உங்களுக்கு நல்ல நாடு இருக்கின்றது. வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்குக்கும் மாணவர்கள் வருகை தரும் பொழுது அனைத்து மாணவர்களும் எவ்வளவு சந்தோஷமடைந்திருப்பார்கள். எனவே இந்த பிள்ளைகள் அனைவருக்கும் இருப்பது ஒரே இரத்தம் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒன்று படவேண்டும். சாரணர் இயக்கத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். அவர்களுக்குரிய அனைத்து உதவிகளும் வழங்க வேண்டும். சாரணர் இயக்கத்துக்கு உலகத்திலே எந்தவொரு நாட்டை சேர்ந்தவர்களும் அதற்கு எதிராக விமர்சனம் செய்ததில்லை. எனவே இந்த இயக்கத்தில் செயற்படுகிறவர்கள் எங்கும் இலஞ்ச ஊழல் செயற்பாட்டாளர்கள், கொலையாளிகள் என்று சொல்லப்படுவதில்லை. எனவே சாரணர் இயக்கத்தை கட்டியெழுப்புவோம் அதன் மூலம் மனிதாபிமானத்தை கட்டியெழுப்பி எதிர்வரும் காலத்தில் அனைவரும் ஒன்றியைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என அவர் தெரிவித்தார்.