சுதந்திரதின நிகழ்வுகள் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடான கலந்துரையாடலொன்று நேற்று(27) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன ஆகியோர் கலந்துகொண்டனர்.

'சுதந்திரத்தின் இதயத்துடிப்பு' என்ற தொனிப்பொருளில் 68ஆவது சுதந்திரதினம் இம்முறை கொண்டாடப்படவுள்ளது.இக்கொண்டாட்டங்களில் நாட்டு மக்களையும் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறினார். காலை நிகழ்வுகள் 8.45 மணிக்கு ஜனாதிபதியின் வருகையுடன் ஆரம்பமாகவிருப்பதால், இராணுவ அணிவகுப்புக்களை பார்வையிட விரும்பும் மக்கள் 8 மணிக்கு முன்னர் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சமூகமளிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பெப்ரவரி 4ஆம் திகதி மாலை 7 மணி முதல் 10.30 மணிவரை கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதில் கலந்துகொள்வதுடன், இதனைப் பார்வையிடும் மக்களை 7 மணிக்கு முன்னர் வருமாறும் அமைச்சர் தெரிவித்தார். சுதந்திர தின நிகழ்வுகள் தொலைக்காட்சிகள் ஊடாக நேரடி ஔிபரப்புச் செய்யப்படவுள்ளன.

அதேநேரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் தேசியக் கொடிகளைப் பறக்கவிடுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி சுதந்திர தினத்தன்று மும்மதஸ்தலங்களிலும் விசேட மதவழிபாடுகள் நடைபெறவுள்ளன