நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்தியின் பொருட்டும், உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு, முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் வகையிலேயே அமையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) தெரிவித்தார்.

அலரி மாளிகையில், விசேட உரையொன்றை ஆற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜி.எல். பீரிஸின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தனி மனித சிந்தனைகள் போன்று அன்றி, அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளுடனும் கலந்துரையாடி, இந்த அரசியலமைப்பை தயாரிக்கவுள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உலகின் முதன்முறையாக, அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் எனவும், 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பொன்றை தயாரிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டை பிரிப்பதோ, அதன் ஒருமைத் தன்மையை சீர்குலைப்பதோ, பௌத்த மதத்திற்கு உரித்தான இடத்தை இல்லாதொழிப்பதோ அரசின் திட்டங்களில் இல்லாத ஒன்றாகும். ஆயினும் அமையவுள்ள இந்த அரசியலமைப்பில் எந்தவொருவருக்கும், எந்தவொரு கட்சியாலும் திருத்தங்களை முன்வைக்க முடியும் என அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

விசேடமாக நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களினது யோசனைகள் இதில் முக்கியமானது எனவும், இதற்காக சமூக வலைத்தளங்கள், ட்விற்றர், பெக்ஸ் போன்ற எந்தவொரு ஊடகத்தின் மூலமும் அவர்கள் வழங்கும் யோசனைகளை உள்வாங்கவும் தயாராகவுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மக்கள் கருத்துக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக தெரிவித்த பிரதமர், அவர்கள் அரசியலமைப்பு சபையிடம் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம் எனவும், குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டிற்குப் பொருந்தும் வகையிலான எந்தவொரு திருத்தமும் மிக முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.