நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரன்டே (Borge Brende) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (07) இலங்கை வருகிறார். சுமார் பத்து வருடங்களின் பின்னர் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வரும் அவர் முற்பகல் 11.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அதேநேரம், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை சந்தித்து இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

பிற்பகல் 5.30 மணிக்கு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் வர்த்தக குழுவின் நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் அவருடைய விஜயம் அமையவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.