இலங்கையை உலகின் ஓர் உன்னத நாடாக உயர்த்துவதற்கு பாடுபடும் ஒரு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியை தான் கௌரவத்துடன் அறிமுகப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நேற்று (5) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் அங்கு உரையாற்றிய போதே பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெகு விமர்சையாக வரவேற்றார். மரியாதை வேட்டுக்களுடன் கூடிய இராணுவ மரியாதையும் பாகிஸ்தான் பிரதமருக்காக இங்கு இடம்பெற்றது. பின்னர் இருநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக ஆரம்பத்திலேயே மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமரின் விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் நட்புறவு மேலும் வலுவடைவதாகவும் தெரிவித்தார். இரண்டு நாடுகளினதும் பொருளாதார வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சேவைகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்காக அரிசி, சீனி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இதன்போது பாகிஸ்தான் பிரதமர் தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்தார். இலங்கையின் பால், சீமெந்து கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி, இச்சந்தர்ப்பத்தின் போது பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததுடன் அதற்கான உதவியினை வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்தார்.

உயர்கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாற்றிக் கொள்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கை கிரிக்கட் பயிற்றுவிப்பாளர்களின் சேவையினை பாகிஸ்தான் கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்காக பெற்றுத் தருமாறு பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக்கொண்டார். இலங்கையின் ஸ்கொஷ் விளையாட்டை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்களை தந்துதவுவதற்கு பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

இலங்கை உற்பத்திப் பொருட்கள் உள்ளடங்கிய கண்காட்சியை எதிர்வரும் காலங்களில் பாகிஸ்தானில் நடாத்துவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான ஒத்துழைப்பினை மேம்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பெண் யானையொன்றை தனது நாட்டுக்கு வழங்குமாறு பாகிஸ்தான் அரசு இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் எதிர்காலத்தில் இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சம்மதத்தினை ஜனாதிபதி, இச்சந்தர்ப்பத்தின் போது தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்து சுதந்திரம்பெற்ற நாடுகள் என்பதுடன் இம்மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து பொதுவானதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதனை நினைவு கூருவதற்கும் இச்சந்தர்ப்பத்தின் போது இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமரிடம் யோசனை தெரிவித்தார்.

இம்முறை பாகிஸ்தானில் இடம்பெறும் சார்க் மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, இம்மாநாட்டில் தான் கலந்துகாள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.