இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக வரவேற்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று வருகை தரும் பாகிஸ்தான்' பிதரமருடன் அவரது பாரியார் பேகம் ஷெரிப், வர்த்தக அமைச்சர் பொறியியலாளர் குராம் தஸ்தகிர்கான், பாதுகாப்பு உற்பத்திகளுக்கான அமைச்சர் ராணா தன்வீர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட உயர் மட்ட முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தருகின்றனர்.

இலங்கைக்கு வருகைதரும் பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை 05 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு உத்தியோபூர்வ வரவேற்பு கோலாகலமாக அளிக்கப்படவுள்ளது. இவ்வரவேற்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளன.

இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் சுகாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள், கலாசாரம், நிதிமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகிய துறைகள் அடங்கலாகப் பல புரிந்துணர்ந்திணர்வு உடன்படிக்கைகள் கைச்சார்த்திடப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கும் அவர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி விஷேட விருந்துபசாரம் அளிக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான குழுவினருக்கு அலரி மாளிகையில் பகல் விருந்துபசாரம் அளிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஆறாம் திகதி கண்டிக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் தலதா மாளிகை, கண்டி மீராமாக்கம் பள்ளிவாசல், கண்டி ஜின்னா மண்டபம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்யவிருப்பதுடன் பேராதனை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றொன்றையும் நடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.