ஜனவரி மாதம் முதலாம் திகதி கறுப்புக் கொடியை ஏற்றுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், எவரும் ஜனவரி முதலாம் திகதி கறுப்புக் கொடியை ஏற்றுவதற்கு விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத் திணைக்களத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நெறிதவறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மோசமான கூட்டணியை உருவாக்கி பல்வேறு விடயங்களின் ஊடாக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. இவ்வாறான நிலையிலேயே ஜனவரி முதல் வரத்தில் கறுப்புக் கொடியை ஏற்றுமாறு கோரியுள்ளனர். வருடப் பிறப்பொன்றில் எவர்தான் கறுப்புக் கொடியை ஏற்றுவதற்கு விரும்புவார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கடந்த கால அரசாங்கத்தில் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வெடிகுண்டுகள் மூலமே பதில் வழங்கப்பட்டது. எனினும் எமது அரசாங்கம் அவ்வாறல்ல. உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. இதனால்தான் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.