மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் ஊடாக ஆரோக்கியமான தேசத்தினை கட்டியெழுப்பும் பொறுப்பானது நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

உலக சமூகம் முகம் கொடுத்துவரும் தொற்று நோய்கள் தொடர்பாக அரசாங்கமானது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி அதனூடாக ஆரோக்கியமான தேசத்தினை கட்டியெழுப்பத் தேவையான சிறப்பான செயற்பாடுளை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனமானது சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ராஜித சேனரத்தின அவர்களுக்கு ‘உலக புகையிலை தின விருது 2015’ இனை வழங்கி கௌரவிக்கும்; முகமாக வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

செப்டெம்பர் 2013ம் ஆண்டு இதே விருது தனக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள் இந்த வருடம் அந்த விருதினை பெற்றுக்கொள்ளும், அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் இச்சந்தர்ப்பத்தின்போது தெரிவித்தார்.

புகையிலைப் பாவனையைத் தடுக்கும் சட்டதிருத்தம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தினை அமைச்சரவையில் தான் சமர்ப்பித்தபோது அவ்வாறான சட்டமூலமொன்று இருந்தால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் என்ற காரணத்தை முன்வைத்து அச்சந்தர்ப்பத்தில் அது நிரகரிக்கப்பட்டபோது ராஜித சேனாரத்த மற்றும் சம்பிக ரணவக்க ஆகியோரே தன்னுடன் கூட இருந்தார்கள் என்ற சம்பவத்தினையும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.

தேசிய ரீதியாக போதைப்பொருள் கொள்கையினைப் உருவாக்கும் பொருட்டு போதைப்பொருளுக்கு எதிராக தேசிய ரீதியில் முன்னெடுத்த நடவடிக்கைகளே இறுதியாக என்னை ஜனாதிபதியாக ஆக்கியது என்றும் அவர் இச்சந்தர்ப்பத்தில் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், பேராசிரியர் கார்லோ பொன்சேகா, புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி பூனம் கெத்ரசின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.