கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமாரவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 6,64,537 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் தோற்றவுள்ளனர். இவர்களில் 4,03,442 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2,61,095 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

இவர்கள் நாடளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவர். இவர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அதிகளவிலான பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவது தெரியவந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மொத்தம் 5,70,409 பரீட்சார்த்திகளே சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினர். நாடளாவிய ரீதியில் 4,279 பரீட்சை நிலையங்களில் இவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 87,128 பரீட்சார்த்திகள் அதிகம் பரீட்சைக்குத் தோற்றுவது தெரியவந்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும், பாடசாலைப் பரீட்சாத்திகள் தனிப்பட்ட பரீட்சாத்திகள் ஆகியோரின் எண்ணிக்கைக்கமைவாக மண்டப ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 20 பரீட்சை நிலையங்களை உள்ளடக்கியதாக இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்முனை கல்வி மாவட்டத்தில் மொத்தம் 152 பரீட்சை நிலையங்களும், 11 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சை மண்டப நிலைய மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள், இணைப்பாளர்கள், உதவி இணைப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அறிவுறுத்தும் கூட்டம் கல்வி மாவட்ட ரீதியாக இடம்பெற்றது. பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.