அரசாங்க தகவல் திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷனி குணதிலக்க தலைமையில் ஆரம்பமான இவ் ஊடக கருத்தரங்கில் தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களும் அவர்களின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதிலும், ஊடகப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே வலியுறுத்தும் வகையிலும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்குத் தொடரோன்றை ஏற்பாடு செய்து வருகின்றது. அவ்வகையில் முதலாவது கருத்தரங்காக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இக் கருத்தரங்கு ஆரம்பமானது.

தகவல் திணைக்களத்தின் தேசிய வெளியீடான திங்கள் சஞ்சிகையும் இக்கருத்தரங்கிற்கு அனுசரணை வழங்கியதுடன் மாணவர்கள் மத்தியில் சஞ்சிகை வௌியீட்டின் முக்கியத்துவம் பற்றி சிறந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் ஊடகத்துறையின் வளர்ச்சி, கணனிக் கல்வியின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக ஆராயப்படவிருப்பதுடன் தமது பாடசாலையில் மாதாந்தப் பத்திரிகையொன்றை வெளியிடுவதன் முக்கியத்துவம் மற்றும் அதனைத் ஆக்க பூர்வமான முறையில் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நடைபெற்ற இக்கருத்தரங்கு நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் முன்னாள் தினகரன் பத்திரிகையாசிரியருமான எஸ்.தில்லைநாதன் அவர்களால் எழுதப்பட்ட "பாராளுமன்ற செய்தியறிக்கையிடல் தொடர்பான ஒரு நூல்" வருகை தந்திருந்த அனைத்து பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷனி குணதிலக்க, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.டி.ஜி.எஸ்.மல்காந்தி, ஆகியோரும் வளவாளர்களாக தினகரன் வாரமஞ்சரியின் பத்திரிகையாசிரியர் எஸ்.செந்தில்வேலன், முன்னாள் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் முன்னாள் தினகரன் பத்திரிகையாசிரியருமான எஸ்.தில்லைநாதன், நவமணி பத்திரிகையாசிரியர் என்.எம்.அமீன் ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.