பொதுநலவாய அமைப்பின் விலகிச் செல்லும் தலைவர் என்ற வகையில் உங்கள் மத்தியில் இச்சந்தர்ப்பத்தில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். பொதுநலவாய அமைப்பின் ஒரு பெருந் தலைவியாக நாம் மதிக்கும் மாண்புமிகு எலிசபத் இராணியார் அவர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கை பொதுநலவாய அமைப்பின் ஒரு ஸ்தாபக உறுப்பு நாடு என்பதாடு, கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் வளர்ச்சி குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பொதுநலவாய அமைப்பின் செல்வாக்கு எமது எல்லா உறுப்பு நாடுகளினதும் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. உறுப்பு நாடுகளின் பலம் அல்லது செல்வ வளம் அன்றி பொதுப் பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் இலங்கையில் சந்தித்தபோது சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பு என்பனவற்றுடனான வளர்ச்சியை அடைந்துகொள்வதே பொதுநலவாய நாடுகளின் பிரதான கரிசனைக்குரிய அம்சமாக இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொண்டோம்.

நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவது தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை வேண்டி நிற்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்டினோம். நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் முன்னுரிமை அளித்து இருப்பதை குறிப்பிடுவதில் நான் மேலும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றயை இளம் தலைமுறை ஒரு சுபீட்சமான நாளைக்கான அடித்தளமாகும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டோம். இளைஞர் தலைமுறைக்கான அர்ப்பணத்தின் மாகம்புற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் எமது இளம் தலைமுறைக்கான எமது ஆர்வத்தை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். பொதுநலவாய இளைஞர் பேரவை தாபிக்கப்பட்டதை நாம் வரவேற்பதோடு, முதலாவது பொதுநலவாய இளைஞர் பேரவை மாநாட்டை நடாத்துவதற்கு உபசரிப்பு நாடாக இருந்ததையிட்டு இலங்கை மகிழ்ச்சியடைகின்றது.

பொதுநலவாய அமைப்பு 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சனத்தொகையைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அபிவிருத்தி அடைந்துவருகின்ற மற்றும் அபிவிருத்தி குறைந்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களது வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்துவது எமது குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால இலக்காகும்.

தொழில்வாய்ப்புகளை உறுவாக்குவதிலும் வறுமையை ஒழிப்பதிலும் பொருளாதார சுபீட்சத்தை மேம்படுத்துவதிலும் வர்த்தகமும் முதலீடும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது நாடுகளின் மூலம் மூலப் பொருட்களை விற்பனைச் செய்வதற்கு பதிலாக பெறுமதிசேர் கைத்தொழில் துறைக்கான ஒத்துழைப்பு கூடிய கவனத்தை பெற வேண்டும்.

கொழும்பு உச்சி மாநாட்டின்போது நாம் வெளியிட்ட கோட்டே அறிக்கை பொதுநலவாய முதலீடு மற்றும் தனியார்துறை ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணத்தை வலியுறுத்துகின்றது. இது எமது அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு நண்பர்கள் மற்றும் அவர்களது பொருளாதாரங்களின் கேள்வியாகும்.

வெளிச் செல்லும் தலைவர் என்ற வகையில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் நாம் மேற்கொண்டுள்ள பணிகளை பின்னோக்கி பார்க்கின்றபோது, நாம் திருப்தியடைகின்றோம். நான் இப்பதவியில் இருக்கின்றபோது எனக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காக எல்லா பொதுநலவாய அரச தலைவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொதுநலவாய அமைப்புக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் எனது நாட்டுக்கும் இலங்கை மக்களுக்கும் செயலாளர் நாயகம் கௌரவ கமலேஷ் சர்மா அவர்களும் அவரது பணிக்குழாமினரும் வழங்கிய பங்களிப்புகளை நான் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

இறுதியாக, இந்த மாநாட்டின் உபசரிப்பு நாடாக இருக்கின்ற அதேநேரம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்புக்கு தலைமை வகிக்கவுள்ள மோல்டா நாட்டுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த மாநாட்டை சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருப்பதற்காக மோல்டா நாட்டின் பிரதமருக்கும் மோல்டா நாட்டின் மக்களுக்கும் எனது நன்றிகளையும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.