நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மோல்டா நாட்டின் பிர்குவில் உள்ள போட் சென் எஞ்சலோவில் (Fort St. Angelo) நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் ஏற்கனவே மோல்டா சென்றடைந்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தலைவராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இம்மாநாட்டின் போது மோல்டா நாட்டின் பிரதமர் திரு.ஜோசப் மஸ்கட் அவர்களிடம் அப்பதவியை கையளிக்கவுள்ளார்.

சர்வதேச மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் கூட்டு கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து தீர்மானிப்பதற்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் இந்த பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஒன்றுகூடுகின்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 23வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இலங்கை உபசரிப்பு நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதற்பெண்மணி திருமதி.ஜயந்தி சிறிசேன அவர்களும் ஜனாதிபதியுடன் இப் பயணத்தில் இணைந்துகொண்டுள்ளார்.