இலங்கையர்கள் 2000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் தலைமையில் அலரிமாளி கையில் நடைபெற்றது. அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

ஜனவரி 8ம் திகதி நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தை உருவாக்க மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணை வழங்கினர்.

இதற்கிணங்க பின்னர் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் தேசிய அரசாங்கமொன்றை நாட்டில் ஏற்படுத்த முடிந்தது.

இது போன்ற ஒரு சூழல் இந்த நாட்டில் முதல் தடவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழல் உருவாவதற்கான அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை பெற்றுக்கொடுத்துள்ளது. எமது இத்தகைய பயணத்திற்கு வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களும் ஆதரவளித்துள்ளனர்.

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கையை அமைச்சர் ஜோன் அமரதுங்கவே ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தற்போது முன்னெடுத்துள்ளார். இலங்கையின் அரசியல் சூழ்நிலை காரணமாகவே எம்மவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. இனவாதம் காரணமாக 1983 இல் ஏற்பட்ட கலவரத்தினால் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றனர்.

இலங்கையர்கள் இவ்வாறு வேறு நாடுகளுக்குச் சென்றதால் நாட்டிற்குத் தேவையான அறிவும் அறிவுசார் ஆட்சியும் இழக்கப்பட்டது.

அரசியல் காரணங்களுக்காக சிங்கள மக்கள் நாட்டை விட்டுச் சென்றனர். மதம் தொடர்பான விவகாரம் காரணமாக முஸ்லிம் மக்கள் இவ்வாறு சென்றனர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியாத காரணத்தினாலும் முறையாக கல்வி கற்க முடியாத சூழ்நிலையாலும் பெருமளவிலானோர் நாட்டை விட்டுச் செல்ல நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இனம், மத பேதங்களின்றி புதிய இலங்கையில் அனைவரும் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்குச் செல்லும் கிரிக்கெட் அணியினர் நாம் இலங்கையர் என பெருமையுடன் தேசியக் கொடியை உயர்த்தும் நிலை தற்போதுள்ளது. அமெரிக்காவிலுள்ளோரும் இத்தகைய விளையாடுப் போட்டிகளைக் கண்டு தாம் இலங்கையர் என பெருமைப்பட முடிகிறது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.