ஜனாதிபதி அவர்களை பெருமகிழச்சியுடன் வரவேற்ற இளவரசி சிரிண்டோன், தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பங்களில் இலங்கை சிறந்த விருந்தோம்பலைக்கொண்ட ஒரு நாடு என்பதை தாம் கண்டு கொண்டதாகத் தெரிவித்தார்.

தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இங்கு வருகைதந்தபோது தாய்லாந்து அரசாங்கம் உட்பட மக்களின் பெருவரவேற்பு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டதோடு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரியுத் சன் ஓட்டா அவர்களின் விசேட அழைப்பையேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடந்த முதலாம் திகதி தாய்லாந்துக்கு பயணமானார்.

இந்த நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி தாய்லாந்து பிரதமரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதோடு, மஹியங்கனை ரஜமகாவிகாரையில் இருந்து புத்தபெருமானின் புனித சின்னங்கள் தாய்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்படும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

மேலும் பேங்கொக் நகரில் நடைபெற்ற இலங்கை தாய்லாந்து வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி உரையாற்றினார். இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையே நிலவிவரும் நீண்டகால சமய மற்றும் கலாசார உறவுகள் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்மூலம் மேலும் பலமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.