இந்நிகழ்வில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நிரோஷன் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2010 ஆம் ஆண்டில் உலக புள்ளிவிபரவியல் தினத்தினை அனுஷ்டிக்கும் படி ஏற்பாடு செய்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை அனுஷ்டிக்கும் இத்தினமானது இவ்வாண்டு 2015 ஆம் ஆண்டு "சரியான தரவுகளால் வளமான வாழ்வு" என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

முதலாவது உலக புள்ளிவிபரவியல் தினம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சுமார் 130 க்கும் அதிகமான நாடுகளின் பங்குபற்றுதலுடனும், 40 சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடனும் நடைபெற்றது. அவ்வகையில் எமது நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முதலாவது புள்ளிவிபரவியல் தினத்தினை "பல சாதனைகளை தொட அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

புள்ளிவிபரவியல் தொடர்பில் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும், புள்ளிவிபரவியல் தொடர்பான அறிவினை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலுமே இப் புள்ளிவிபரவியல் தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரண்டாவது தடவையாக அனுஷ்டிக்கப்படவுள்ள உலக புள்ளிவிபரவியல் தினத்தினை நடாத்த ஏற்பாடு செய்து தருமாறு தனது கடிதத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கேற்ப ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் புள்ளிவிபரங்கள் தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் பல வகையான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் முக்கிய நிகழ்வாகவே நாளை 20 ஆம் திகதி உலக புள்ளிவிபரவியல் தினக் கொண்டாட்டம் கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரசாங்க அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள், அரச - தனியார் நிறுவன அலுவலர்கள், ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.