மூன்று தசாப்தகால போரின் காரணமாக சீர்குழைந்துள்ள மக்கள் மத்தியிலான நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அரசாங்கத்தினால் மட்டும் கட்டியெழுப்ப முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனியார் துறை என்ற வகையில் சகலரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியம் எனக் குறிப்பிட்டார்.

நேற்று முந்தினம் (11) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற DSI சித்துவிலி சிறிலங்கா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

DSI சித்துவிலி சிறிலங்கா சித்திரப் போட்டியும் சித்துமின விருது வழங்கும் நிகழ்வும் 25 ஆவது வருடமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்தார். இந்த சித்திரப் போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உட்பட 10,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSI சித்துவிலி சிறிலங்கா நாட்டில் உள்ள பிள்ளைகளின் சிந்தனைகளை அவர்களது இனம், மதம், பொருளாதார நிலைமைகள் அல்லது பிராந்தியம் என்ற வேறுபாடுகளின்றி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தமைக்காக சித்திரப் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அத்துரலியே ரத்ன தேரர், அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, விஜயதாச ராஜபக்ஷ, அர்ஜூன ரணதுங்க, டி.செம்சன் என்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நந்ததாச ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.