ஐ. நா. பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 7.30 மணியளவில் ஜனாதிபதி நேற்று (30) உரையாற்றிய போதே ஜனாதிதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்தகாலங்களைப் போலல்லாது நவீன தேசமொன்றை கட்டியெழுப்புவதோடு மனித உரிமைகளை பாதுகாக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதுடன் அதனை பாதுகாப்பது மற்றும் விரிவு படுத்துவதற்கான புதிய செயற்பாட்டு வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான இலங்கையின் பங்களிப்பை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலத்தை நேர்மையாக கையாள்வது மற்றும் நவீன இலங்கையை கட்டியெழுப்புவது எங்கள் முன்னுள்ள பிரதான தேவையாக உள்ளது. இலங்கை தெற்காசிய வலயத்தில் பழமையான ஜனநாயக உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் முன்னிலையில் இருக்கின்றது. சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இலங்கைக்கு நெருக்கடிகள் இருந்த போதிலும் கூட மனித வள மேம்பாட்டுச் சுட்டிகள் உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.

நிலையான வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது இளைஞர்களே, 21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்கள், அறிவை அடிப்படையாகக் கொண்ட உலகை வெல்வதற்கு முடியுமான திறமைகளுடன் கூடிய தொழில் படையினராக இளைஞர்களை மாற்றுவது எங்களின் முதற் குறிக்கோளாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அதன் 70 ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 70 வருட காலத்தில் உலக மக்களின் சமாதானம் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட சவாலானதும் கடினமானதுமான பொறுப்பை தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்துள்ளது. அத்தகைய சவால்கள் இப்போதும் எம்முன் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையானது ஐ.நா. சபையில் உறுப்புரை பெற்று 60 வருடத்தை நிறைவு செய்துள்ளது. எமது நாடானது ஐக்கிய நாடுகள் சபையில் நேரடியாகவும் பொறுப்புடனும் செயலாற்றும் அங்கத்துவ நாடாகும். இலங்கையானது ஐ.நா.வின் பிரகடனம் உள்ளிட்ட சகல சர்வதேச உடன்பாடு மற்றும் உடன்படிக்கைகளை கெளரவிக்கும் நாடாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமானது மனித உரிமையை அங்கீகரிப்பதே.

இலங்கை அரசாங்கம் அந்த பொறுப்பை உறுதியாக நிறைவேற்றும் நாடு என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அதற்கிணங்க புதிய செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.2015 ஜனவரி 8ம் திகதி இலங்கை மக்கள் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகம் நிறைந்த புதிய யுகத்தை ஆரம்பித்துள்ளனர் என்பதை சகலரும் அறிவர். எமது சமூக அபிவிருத்தியானது சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியே எமது அரசாங்கத்தின் ஐந்து வருட எதிர்கால இலக்காகும்.

இம்முறை 70 வது வருடத்தை நிறைவு செய்யும் ஐ.நா. சபை சமா தானம் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை தொடர்பான எதிர்கால பாதை என்ற தொனிப்பொருளில் எமது அரசாங்கம் முன்வைத்துள்ள நோக்குடன் சமமானதாகும். இதற்கிணங்க சமாதானம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை போன்றவற்றை இலங்கைக்குள் மேலும் காத்திரமாக முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது.

இலங்கை மக்கள் கடந்த எட்டு மாத காலமாக ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் முகங் கொடுத்துள்ளதுடன் புதிய ஜனாதிபதியையும் புதிய அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இலங்கையானது முழுமையான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை அறிமுகப் படுத்துவதற்கு எனது ஆட்சியின் முதல் ஆறு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது பல்வகை ஜனநாயகத் தைப் பலப்படுத்தும் வகையில் நிறுவன ரீதியான மறுசீரமைப்புடனான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை காலமும் ஜனாதிபதியிடமிருந்து நிறைவேற்று அதிகாரத்தின் பெரும் பகுதியை எனது தலையீட்டுடன் பாராளுமன்றத்திற்கும் ஏனைய சுயாதீன நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் ஆறு தசாப்த காலமாக தொடர்ந்த உடன்பாடற்ற அரசியலுக்கு பதிலாக உடன்பாட்டுடனான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து உடன்பாட்டு அரசாங்கத்தை அமைக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். நாடு என்ற ரீதியில் எமது புதிய பிரவேசம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை ஒன்றிணைந்து சாத்தியமாக்கிக்கொள்வதே 21வது நூற்றாண்டின் சவால்களை வெற்றிகொள்ள இலங்கையானது சமூக பொருளாதார மற்றும் அரசியல் பாதையில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. இதன்போது நல்லிணக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய புதிய எதிர்பார்ப்பை வெற்றிகொள்வதற்காக தேவையான அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நிலமையை மறுசீரமைப்பை துரிதமாக முன்னெடுப்பதற்கு நான் தலைமைத்துவம் வழங்கும் இணக்கப்பாட்டு அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை யுத்தத்திற்கு முகங்கொடுத்த நாடாகும். யுத்தம் சமூக அழிவுக்குக் காரண மாகியதுடன் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் அது தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகமாகும். எத்தகைய யுத்தமானாலும் பயங்கரவாத செயற்பாடுகளும் மனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதே ஆகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரகடனத்தின் முன்னுரையில் அத்தகைய மனிதாபிமானத்திற்கு எதிராக புரட்சி ஏற்படும் விதம் எத்தகையது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் ஆரம்ப வித்து எதுவானாலும் மனிதாபிமானத்திற்கு எதிரான இத்தகைய குரூர செயற்பாடுகளை தோற்கடிப்பது இன்றைய யுகத்தின் சவாலாகும். துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்கான வழியாக பயங்கரவாதத்தை பாவிப்பது மாத்திரமல்லாமல் அவ்வாறு தலை தூக்குகின்ற பயங்கரவாதத்தை முழுமையாக துடைத்தெறியும் போது அதனை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளும் கூட பிரச்சினைக்குரியதாகலாம். ஆசியா முதல் ஆபிரிக்கா ஊடாக லத்தீன் அமெரிக்கா வரையிலான எமது பிராந்தியத்தின் கழுத்தை நெருத்து பரவியுள்ள பயங்கரவாதம் எனும் ஒரு சங்கிலியின் முக்கியமான ஒரு வலயத்தை கழற்றி விடுவதற்கு எம்மால் முடிந்துள்ளது.

உலகிலேயே குரூரமான பயங்கரவாத இயக்கத்தையே நாம் ஒழித்துள்ளோம். அதனை முழுமையாக ஒழித்துக் கட்டிய பின்னரும் அதனால் எமக்கு மிகுந்த அனுபவங்கள் கிடைத்துள்ளன. அந்த அனுபவங்களை தற்போது பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும். அந்த நாடுகளுடன் நேரடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அதற்காக குரலெழுப்புவதற்கும் இலங்கை தயாராகவுள்ளது.

தென் ஆசிய வலயத்திலுள்ள பழைய பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு உரிமை கோரும் நாடுகளிடையே இலங்கை முன்னணியில் இருக்கிறது. 30 வருடம் நீடித்த யுத்த சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட இந்த ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க எமது நாட்டுக்கு முடிந்துள்ளது. இந்தக் காலப் பகுதியினுள் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணுவதற்கு இடையூறு ஏற்பட்ட போதும் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் முன்னெடுத்து வந்த நலன்புரி அரச கொள்கையை பாதுகாக்க இயலுமாக இருந்தது.

சுதந்திரம் பெற்றது முதல் பெருமளவு சமூக ஜனநாயக வழியில் பயணம் செய்த இலங்கை, மோதல்களுக்கு மத்தியிலும் கூட மனித அபிவிருத்தி சுட்டிகளில் உயர்ந்த இலக்குகளை எட்டியது. இந்த வெற்றியினூடாக ஐ.நா. மிலேனிய இலக்குகளை நிறைவேற்றுவதற்கு நாம் செய்த அர்ப்பணிப்பு தெளிவாகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்களை பலப்படுத்துவது அபிவிருத்தியின் பங்காக இருக்க வேண்டும். இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் அது மோதலுக்கு அடித்தளமாகிறது.

நிரந்தர அபிவிருத்தியில் இளைஞர் சக்தி பிரதானமானது. 2015 நிரந்தர அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களின் திறன் அபிவிருத்தி முக்கிய இடம் வகிக்கிறது. இங்கையில் புகழ்பூத்த பெளத்த சம்பிரதாயங்களின் பிரகாரம் மனிதன் முகம் கொடுக்கும் மூன்று வகை பிரச்சினைகளை அடையாளங் கண்டுள்ளேன். மனிதனும் இயற்கையும் செய்யும் போராட்டம் அதில் முதலாவதாகும். இதன் காரணமாக அபிவிருத்தியின் பெயரால் மனிதன் பூமியெங்கும் பரந்துள்ள வளங்களை கட்டுப்பாட்டின்றி தான்தோன்றித்தனமாக சூறையாடி வருகிறான். அடுத்தது மனிதன் ஏனைய மனிதர்களுடன் செய்யும் போராட்டமாகும்.

மனித சமூகத்திலுள்ள நபர்களுடனும் இனக் குழுக்களுடனும் மனிதர்களுடன் இனங்களுடன் போராட்டம் நடத்துவது இதில் இரண்டாவதாகும். மனித உரிமைகளை சட்ட ஆதிக்கத்தினூடாக பாதுகாக்காத சமயங்களில் இவ்வாறான மோதல்கள் இடம்பெறுகின்றன. மனிதன் தன்னுடன் செய்து கொள்ளும் போராட்டம் இதில் மூன்றாவதாகும். நாம் எம்முடன் செய்துகொள்ளும் போராட்டம் காரணமாகவே மேற்குறிப்பிட்ட இரு வகை மோதல்களும் இடம்பெறுகின்றன. இனவாதம், அதீத பாவனை, தான்தோற்றித்தனமான சூழல் அழிவு, மற்றவரின் மனித உரிமை மீறல்கள் வருமான முரண்பாடு என்பவற்றுக்கு மனிதர்களான எமக்குள் இருக்கும் பலவீனங்களை கட்டுப்படுத்த முடியாமையே காரணமாகும்.

சுயபோதனை மற்றும் சமநீதி ஆகிய அத்திவாரங்களின் மேலே நிரந்தர அபிவிருத்தி கட்டியெழுப்பப்பட வேண்டும். சுயபோதனை என்பது தனிநபர் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் முழு மனித வர்க்க மட்டத்திலும் விருத்தி செய்ய முடியுமானால் அது மனித வர்க்கம் எடுத்து வைக்கும் பாரிய முன்னெடுப்பாக அமையும். நாட்டுத் தலைவர்களாக கூடி பூகோள செயற்பாட்டு திட்டம் தயாரிக்கையில் நான் முன்வைத்த சுய போதனை மற்றும் சமநீதியை அடிப்படையாக கொண்ட பிரவேசமொன்றை முன்மாதிரியாக கொள்ளுமாறு கோருகிறேன் என்று கூறினார்.