தேர்தல்கள் தொடர்பில் வௌியிட்ட விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதற்காக 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122 ஆம் பிரிவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ் ஏற்பாட்டினையே எதிர்வரும் தேர்தல்களின் போதும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

அவ்வகையில் அனைத்து வாக்காள தொழிலாளர்களுக்கும் இந்த பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆகக்குறைந்தது 4 மணித்தியாலங்கள் வாக்களிக்க செல்வதற்கென தொடர்ச்சியான காலப்பகுதியாக சம்பள இழப்பற்றற விசேட விடுமுறை வழங்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஆயினும் தனியார் பிரிவுகளில் கடமையிலுள்ளவர்களுக்கு எழுத்து மூலமான அத்தகைய விசேட விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறை இல்லாததன் காரணமாக பெரும்பாலான இடங்களில் விடுமுறைகள் வழங்கப்படுவதில்லை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் உரிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வகையில் கடந்த 22 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தொழில், தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம், தேர்தல் ஆணையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது.

அதற்கமைவாக, வாக்காளா் பணிபுரியும் இடத்திலிருந்து 40 கிலோமீற்றர் அல்லது அதற்கு குறைவான தூரத்தில் அவரது வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் அரைநாள் விடுமுறை வழங்கவேண்டும் என தோ்தல்கள் ஆணையாளா் தெரிவித்துள்ளார். இதேவேளை 40 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் வாக்காளருக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படவேண்டும்.

மேலும் வாக்காளா் பணிபுரியும் இடத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொடக்கம் 150 கிலோமீற்றர் தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் இரண்டு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள சில வாக்காளா்கள் தங்களின் வாக்குகளை பதிவுசெய்வதற்கு மூன்று நாள் கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை வழங்கவேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எழுத்து மூலமாக விடுமுறை கோர வேண்டுமென்பதுடன் அனைத்து தலைவர்களும் விசேட விடுமுறைக்காக விண்ணப்பிப்பவர்களின் காலஎல்லை தொடர்பான ஆவணத்தினை தயாரித்து கடமை நிலையங்களில் காட்சிப்படுத்தி வைத்தலும் அவசியமாகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.