அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சம்பிக ரணவக்க, ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மோசடிகளை தடுப்பதற்கு தற்பொழுது இருக்கும் சட்டம் போதுமானதாக இல்லாததால் விரைவில் விசேட சட்டமூலமொன்றை கொண்டுவரவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்தவும் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகவும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
ஊழல் மோசடிக்கு எதிரான குழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக ரணவக்க, ரவூப் ஹக்கீம் மற்றும் த. தே. கூ. தலைவர் இரா. சம்பந்தன், ஜே. வி. பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் எம்.பி., சரத் பொன்சேக்கா, கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, சட்டத்தரணி ஜே. சீ. வெளியமுன, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த குழுவின் ஆலோசனை படி செயற்படுவதற்கு அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அவசர நடவடிக்கை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
குறுங்கால செயற்திட்டம்
குறுகியகால செயற்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்த ளிப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து ஆராயவும் காணி, மற்றும் சொத்துக்கள் மோசடியாக கைப்பற்றப்பட்டமை குறித்து ஆராயவும், பங்குச் சந்தை மோசடி குறித்து விசாரிக்கவும் மோசடிகளுக்கு பொறுப்பான வர்த்தகர்களின் சொத்துக்கள் குறித்து ஆராய்ந்து செயற்படவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீண்ட கால செயற்திட்டம்
நீண்ட கால திட்டத்தின் கீழ் மோசடியாக இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நிதி குறித்து ஆராய்ந்து அவற்றை கைப்பற்றவும் குற்றவாளிகளை தண்டிக்கவும், தேசிய கணக்காய்வு சட்ட மூலத்தை சமர்ப்பித்தல் இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஐ. நா. மோசடி தடுப்பு விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிதித் துறையில் இடம்பெற்ற மோசடிகளை விசாரிக்க விசேட திறமையுள்ள குழுவின் உதவி பெற அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக இந்திய மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதிப் புலனாய்வு பிரிவின் (Financial Intelligence Unit) நிபுணர்களின் உதவியும் உலக வங்கி அடங்கலான சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியும் கிடைக்க இருப்பதாக பிரதமர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள் குறித்த உண்மை தன்மையை வெளிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்காக சகல அதிகாரங்களும் கொண்ட நிறுவனமொன்றை ஸ்தாபிக்கும் வகையில் சட்ட மூலமொன்றை தயாரிக்க நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் தலைமையில் நால்வரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ஒவ்வொரு அமைச்சின் கீழும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான தகவல்களை சாட்சிகளுடன் பிரதமர் அலுவலகத்துக்கு துரிதமாக அறிவிக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு முன்னெடுக்கப் பட்டது என்பது குறித்து ஆராய பிரதமர் தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டி ருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரம், வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சம்பிக ரணவக்க 2013 ஆம் ஆண்டில் குடும்ப அலகுகளுக்குக் கிடைக்க வேண்டிய 700 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. இது குறித்து வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து தகவல்கள் கிடைத்து வருகிறது.
மோசடிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் சர்வதேச பொலிஸின் உதவியுடன் தருவிக்க நடவடிக்கை எடுப்பேன்.