2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.          இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கான இலத்திரனியல் அனுமதிப்பத்திர (e-license)   முறைமையை அறிமுகப்படுத்தல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், பொதுவாக ஒரு வருடத்தில் 17,000 அனுமதிப்பத்திரங்களை வழங்குவதுடன், குறித்த செயன்முறை குறைந்தபட்ச தொழிநுட்பத்துடனும் அதிகபட்ச மனித வளத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வனுமதிப்பத்திரங்கள் வழங்குகின்ற செயன்முறையை மிகவும் வினைத்திறனாகவும், குறைந்தளவு மனித வளத்துடனும் நடைமுறைப்படுத்துவதற்காக தகவல் தொழிநுட்ப முறையைப் பயன்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இலங்கை முதலீட்டுச் சபை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின்  அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான செயன்முறைக்குக் குறித்த ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களின் பங்குபற்றலுடன் அச்செயன்முறையை தானியங்க முறையில் மேற்கொள்ளக் கூடியவாறு வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்புடைய தேச எல்லைகள் பாதுகாப்புப் பணியகம் (EXBS வேலைத்திட்டம்) இனால் நன்கொடையாக 280,000  அமெரிக்க டொலர்கள் பெறுமதியான STRATLINK தகவல் தொழிநுட்ப செயல்நிரலாக்கத்தின்  முழுமையான மொழி மூலக் குறியீட்டுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் 'இ-அனுமதிப்பத்திரம்' நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.          தெற்காசிய வணிக மற்றும் சேவை வழங்கல் மையக் கருத்திட்டம்

இலங்கையின் பெரிய துறைமுகமான கொழும்புத் துறைமுகம் தெற்காசிய வலயத்தில் முக்கிய கேந்திரமயமான துறைமுகமாகும். கொழும்பு நகரை துறைமுக சேவைகள் வழங்கல் கேந்திர நிலையமாக மாற்றுதல் இலங்கை துறைமுக அதிகார சபையின் தேசிய துறைமுகங்கள் திட்டத்தின் அடிப்படை மூலோபாய நோக்கமாகும். கொழும்பு தெற்குத் துறைமுகத்திற்குச் சொந்தமான பட்டர்ன்பேர்க் பிரதேசம் மற்றும் ப்ளுமென்டல் பிரதேசம் போன்ற சேவை வழங்கும் பிரதேசங்களை அரச-தனியார் பங்குடமையின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பிரதேசங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 150 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய  (CICT)  கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை சைனா மேர்ச்சன்ட் போர்ட் (CM Port)   கம்பனி, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய (CICT) ) கம்பனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையில் அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.          குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு தினத்தை பிரகடனப்படுத்தல்

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உரிமைகளையும் உரித்துடமைகளையும் எடுத்துக் கூறுவதற்கும், அத்தகைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான அமைப்புமுறையொன்றை உருவாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அன்றாடம் அதிகரித்து வருகின்ற குற்றங்களால் பாதிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நபர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பதற்காக சமூகத்தைத் விழிப்புணர்வூட்டும் நோக்கில் அதுதொடர்பாக அரசி நிறுவனங்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை கூருணர்வு மிக்கதாக்கும் நோக்கில் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு தினமொன்றைப் பிரகடனப்படுத்துதல் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தினமான மார்ச் 07 ஆம் திகதி 'குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு தினம்' ஆக பிரகடனப்படுத்துவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.          கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்திற்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பணங்களுக்காக அறவிடப்படும் விமானச் செலுத்தல்களுக்கான கட்டணத்தைத் திருத்தம் செய்தல்

கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்திற்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக அறவிடப்படும் விமானச் செலுத்தல்களுக்கான கட்டண அறவீடு வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனிகளால் மேற்கொள்ளப்படுவதுடன் குறித்த கட்டணம் 1985 ஆம் ஆண்டிற்குப் பின்னர் திருத்தம் செய்யப்படவில்லை. அதனால், கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்திற்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக தற்போது அறிவிடப்படுகின்ற விமானச் செலுத்தல்களுக்கான கட்டணம் 2023.02.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.          முன் நிரப்பப்பட்ட எனொக்ஸபாரின் சோடியம் ஊசிமருந்து 4,000 IA+,  0.4 மில்லிலீற்றர் 800,000 சிறிஞ்சர்கள் வழங்கலுக்கான பெறுகை

இதய நோயாளர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 800,000 எனொக்ஸபாரின் சோடியம் ஊசிமருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்களிடம் வரையறுக்கப்பட்ட போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 4 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, பெறுகை மேன்முறையீட்டு சபை மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த பெறுகையை M/s Brawn Laboratories Ltd. . கம்பனிக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.          தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் கருமங்களை நிர்வகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமான பாராளுமன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தல்

அனைத்துப் பிரஜைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் சமமான வாய்ப்புக்களை உருவாக்கல், தனித்துவத்தைப் பேணல், பன்மைத்துவத்தைப் பாராட்டுகின்றதும் மதிப்பளிக்கின்றதமான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் சேர்ந்து வாழக்கூடிய சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம்  (ONUR)  தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த செயலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகையில், அதன் தொழிற்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு சட்டமொன்றின் மூலம் குறித்த செயலகத்தை நிரந்தர நிறுவனமாக தாபிப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.          இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்துக்கும் இடையிலான வருமானம் ஈட்டுகை அடிப்படையிலான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித்தடுத்தல் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்துக்கும் இடையிலான வருமானம் ஈட்டுகை அடிப்படையிலான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித்தடுத்தல் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கைக்கு அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் 75(3) ஆம் உறுப்புரையின் கீழ் குறித்த உடன்படிக்கை சரியான வகையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளமையை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு வெளிவிவகார அமைச்சு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த உடன்படிக்கையில் இராஜதந்திர மட்டத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 75(1) உறுப்புரையின் கீழ் குறித்த உடன்படிக்கையின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08.          வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வனாந்தரங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு

வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்பு பாதுகாப்புத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வனாந்தரங்களில் நீண்டகாலமாக வசித்துவருகின்ற அல்லது விவசாய நடவடிக்கைகளுக்காக தொடர்ந்திருக்கின்ற மக்களுடைய பிரச்சினைகள் பல வருடங்களாக கலந்துரையாடப்பட்டு வருவதுடன், அதற்கான நிரந்தரத் தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை. குறித்த பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகளை வழங்கும் நோக்கில் கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய குறித்தொதுக்கிய காலப்பகுதியுடனான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகள் இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவாக நிலவுகின்ற பிரச்சினையாவதுடன், ஆரம்பக் கட்டமாக வனாந்தரங்கள் அதிகமாகக் காணப்படும் மற்றும் யுத்தம் நிலவிய பகுதிகளில் அதாவது, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனறாகல போன்ற மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.