01. விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைககளை ஊக்குவித்தல்

தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவதற்கு 2022.06.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஆலோசனைகள் அடங்கிய 03 மாத காலப்பகுதிக்கு ஏற்புடைய வகையில் 2022.06.15 ஆம் திகதிய 15/2022 ஆம் இலக்க அரச பொது நிருவாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாலும், விவசாய நடவடிக்கைகளுக்கான அடிப்படைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு போதுமானளவு நேரம் கிடைத்திருப்பதைக் கருத்தில் கொண்டு மேற்படி சுற்றறிக்கையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்வதற்கு அரச நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

02. அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச கம்பனிகளின் செலவுகளை முகாமைத்துவம் செய்தல்

தற்போது நாட்டில் நிலவுகின்ற சவால்மிக்க நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இயலுமான வகையில் அரச வியாபாரங்களின் தொழிற்பாட்டுச் செயற்றிறன் மற்றும் நிதி ஒழுக்கங்களை மிகவும் இறுக்கமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, அரச செலவுகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2022.04.26 ஆம் திகதிய தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை 03/2022 ஆம் இலக்கத்திற்கு இணையாக, அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச கம்பனிகளின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உள்ளூர் ஆடைக் கைத்தொழில் உற்பத்திகளுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரிச் சலுகையை வழங்கல்

கொவிட் - 19 தொற்று நிலைமையிலும் கூட, இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான துறையான ஆடைக் கைத்தொழிற்துறை அமைந்துள்ளது. ஆயினும், மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையாலும், தற்போது நாட்டில் நிலவுகின்ற ஆரோக்கியமற்ற பொருளாதார நிலைமைகளாலும் ஆடைக் கைத்தொழிற்துறைக்குத் தேவையான உள்ளூரில் தயாரிக்கப்படாததுமான உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது உள்ளூர் ஆடைக் கைத்தொழிற்துறை உற்பத்தியாளர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதற்குத் தீர்வாக ஒத்திசைவுக் குறியீட்டு இலக்கம் 19 இன் கீழ் உள்ளூரில் தயாரிக்கப்படாத உபகரணங்கள் பிரிவுக்கான தீர்வை வரிச் சலுகையை வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

              

04. புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டபூர்வமான முறையில் பணம் அனுப்புவதை ஊக்குவித்தல்

நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்புகின்ற பணத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2022.06.27 திகதி அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் அலுவலர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலர் குழுவின் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மூலம் எமது நாட்டிற்கு முறைசார் வழிகள் மூலம் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் யாப்பை சட்ட வலுவாக்குதல்

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை முறைசார்ந்த வகையில் வலுப்படுத்தி போதியளவு அதிகாரங்களுடன் சட்ட ரீதியாகத் தாபிக்கப்பட வேண்டிய தேவை கண்டறிப்பட்டுள்ளது. அதற்கமைய, யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை தாபிப்பதற்கு தேவையான யாப்பின் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்பிப்பதற்காகவும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கான திருத்தம்

பராயமடையாத பிள்ளைகளின் திருமணத்திற்கு பெற்றோர்களின் விருப்பு ஒப்புதல் தேவையென குறித்துரைக்கப்பட்டுள்ள, மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் II ஆம் பகுதியை நீக்குவதற்கும் மற்றும் அதில் காணப்படும் ஒவ்வாமையை நீக்குவதற்காகவும் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021.10.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.