பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமராக பததவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக இன்று (31) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வழிபாடுகளை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் கண்டியில் வைத்து மேலும் கூறியதாவது-

சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் அமர்விலும் அதற்கான அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியும் நானும் சர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். நாட்டின் வேலைத் திட்டங்களுக்கு அவர்களது ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.