வன்முறையற்ற, அமைதியான கூட்டங்களுக்கான உரிமை உறுதி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றியமை தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ராஜதந்திரிளுக்கு விளக்குமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டின் 21 வது சரத்து மற்றும் அமைதியாக கூடுவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதற்கான  அரசியலமைப்பின் 14 (1) (ஆ) சரத்து ஆகிய இரண்டையும் தற்போதைய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது ராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசாங்க கட்டிடங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி அதன் வளங்களை வேறு நோக்கத்திற்காக உபயோகிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அமெரிக்க சிவில் சுதந்திர சங்கத்தின் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வளங்களுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நகரங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் விகாரமாதேவி பூங்கா வெளியரங்கம், புதிய நகர மண்டபம், ஹை பாக் மற்றும் கம்பல் விளையாட்டரங்குகள் போன்ற கொழும்பு நிர்வாகப் பிரதேசத்தில் காணப்படும் இடங்களில் வன்முறைகளற்ற ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவேளை கோட்டா கம இணையம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த அவர் பாதுகாப்பு படையினர் அவ்வாறு இணையத்தை நீக்கும் வகையில் செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டமை உள்ளிட்ட சட்ட ரீதியான செயல்பாடுகள் தொடர்பிலும் சட்டமா அதிபர் இதன் போது ராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.